‘கஜா’ புயலின் பாதிப்பால் இருளில் மூழ்கி கிடக்கும் கிராமங்கள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்


‘கஜா’ புயலின் பாதிப்பால் இருளில் மூழ்கி கிடக்கும் கிராமங்கள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 17 Nov 2018 10:45 PM GMT (Updated: 17 Nov 2018 9:47 PM GMT)

கஜா புயலின் தாக்கத்தால் மணப்பாறை, மருங்காபுரி பகுதிகளில் மின்சார வசதி இன்றி கிராமங்கள் இருளில் மூழ்கி கிடக்கின்றன. இதுகுறித்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மணப்பாறை,

கஜா புயலின் கோர தாண்டவத்துக்கு பாதிக்கப்பட்ட மாவட்டங்களுள் திருச்சி மாவட்டமும் ஒன்று. திருச்சி மாவட்டத்தில் கஜா புயலானது மணப்பாறை, மருங்காபுரி தாலுகாக்களை சேர்ந்த 88 ஊராட்சிகள் மற்றும் துவரங்குறிச்சியை உள்ளடக்கிய பொன்னம்பட்டி பேரூராட்சி, 27 வார்டுகளை கொண்ட மணப்பாறை நகராட்சி என ஒட்டு மொத்த பகுதிகளையும் புரட்டிப் போட்டு விட்டது.

புயலின் தாக்கத்தால் பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தன. சாலையோரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது, பல்வேறு இடங்களிலும் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதுமட்டுமின்றி பெரும்பாலான இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் வீடுகள் மீதும் விழுந்தன.

விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழைகளும் அடியோடு பாதிக்கப்பட்டன. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் பள்ளி மற்றும் சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர். செல்போன் கோபுரங்களும் முறிந்து விழுந்ததால் தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

அனைத்து கிராமங்களிலும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்து சேதம் அடைந்து இருப்பதால் இந்த 2 தாலுகாக்களிலும் 2-வது நாளாக மின்சாரம் இன்றி கிராமங்கள் இருளில் மூழ்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மலைப்பகுதிகளில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்து கிடக்கின்றன. முக்கிய சாலைகள் மற்றும் பிரதான தெருக்களில் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் உள் கிராமங்களில் இதுபோன்ற சீரமைப்பு பணிகளில் ஆள் பற்றாக்குறையால் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

புயலின் தாக்கத்தில் இருந்து எப்படி மீண்டு வெளியே வருவது என தெரியாமல் தவித்து வருகிறோம் என அப்பகுதி மக்கள் கண்ணீருடன் கூறினார்கள். சரிந்து விழுந்த மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின் கம்பங்களை நட்டு மின் இணைப்புகளை வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மின்சாரம் இல்லாததால் குடிநீர் பெறுவதிலும் பல பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளது.

மணப்பாறை பகுதியில் நடந்து வரும் மீட்பு பணிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, திருச்சி மாவட்ட கலெக்டர் கே. ராஜாமணி ஆகியோர் நேற்று பகல் முழுவதும் ஆய்வு செய்தனர். மீட்பு பணிகளை துரித கதியில் முடிக்க உத்தரவிட்டு உள்ளனர்.

கலெக்டர் ராஜாமணி மீட்பு பணிகள் தொடர்பாக நிருபர்களிடம் கூறிய தாவது:-

திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை மணப்பாறை பகுதியில்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு போக்குவரத்து சீர் செய்யப்பட்டு உள்ளது. குடிநீர் வசதி சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1500-க்கும் அதிகமான மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள், துணை மின்நிலையங்கள் சேதம் அடைந்துள்ளன. கூடுதலாக வர வழைக்கப்பட்டுள்ள மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதனை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் 3 நாட்களில் முழுமையாக அனைத்து பகுதிகளுக்கும் மின்வினியோகம் வழங்கப்படும்.

மாவட்டத்தில் அந்தநல்லூர், லால்குடி, திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பெருவாரியாக சேதமடைந்துள்ள வாழைமரங்களை வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். இன்னும் 4 நாட்களில் புயல் பாதிப்புகள் குறித்த அறிக்கையினை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். 2 பேர் உயிரிழந்துள்ளனர். 20 கால்நடைகள் மற்றும் 2000-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளன. அவற்றின் உரிமையாளர்களுக்கு அரசிடமிருந்து இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் மணப்பாறை பகுதியில் நேற்று ஒரு சில இடங்களுக்கு மட்டும் மின் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது அண்ணா நகர் பகுதியில் ஒருவர் கேபிள் வயர்களை இழுத்து கட்டிக் கொண்டிருந்த போது மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story