கேமாரி நோய் தாக்குதல்: கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
கேமாரி நோய் தாக்குதலில் கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
டி.என்.பாளையம்,
நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் குறுவை சாகுபடியில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய ஈரோடு மண்டலத்தில் முதல் கட்டமாக ஏழுர், டி.என்.பாளையம், கள்ளிபட்டி, நஞ்சகவுண்டம்பாளையம், புதுவள்ளியம்பாளையம், காசிபாளையம், புதுக்கரைபுதூர், கூகலூர், கரட்டடிபாளையம், மேவானி, அத்தாணி ஆகிய 11 இடங்களில் திறந்தவெளி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கதிரவன் அறிவித்திருந்தார்.
அதன்படி ஏழுரில் அமைக்கப்பட்ட புதிய கொள்முதல் நிலையத்தை நேற்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகம் பல்வேறு துறைகளில் வியத்தகு மாற்றங்களை தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோமாரி நோய்க்கு பல்வேறு முகாம்கள் அமைத்து கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் கோமாரி நோய் தாக்குதலில் இறந்த கால்நடைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன்பிறகு கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். கஜா புயல் தாக்குதலுக்கு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டதை அனைவரும் வரவேற்று பேசிஉள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.