மத்திய நிறுவனங்களில் பயிற்சிப் பணிகள்


மத்திய நிறுவனங்களில் பயிற்சிப் பணிகள்
x
தினத்தந்தி 19 Nov 2018 7:30 AM GMT (Updated: 18 Nov 2018 11:58 PM GMT)

முன்று மத்திய நிறுவனங்களில் ஏராளமான பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-

கப்பல் பணிமனை

இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் பணிமனை ஒன்று விசாகப்பட்டினத்தில் செயல்படுகிறது. இந்த பணி மனைக்கான பயிற்சி மையமும் அங்கு இயங்குகிறது. நேவல் டாக்யார்டு அப்ரண்டிஸ் ஸ்கூல் எனப்படும் அந்த பணிமனையில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் பயிற்சிக்கு சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது 2019-20 மற்றும் 2020-21 ஆண்டுகளுக்கான பயிற்சி சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 275 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எலக்ட்ரீசியன், எலக்ட்ரோபிளேட்டர், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், பிட்டர், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், மெஷினிஸ்ட், டூல் மெயின்டனன்ஸ், பெயிண்டர், பேட்டன் மேக்கர், ஆர் அண்ட் ஏ.சி. மெக்கானிக், வெல்டர், கார்பென்டர், பவுண்டரிமேன், போர்ஜர், ஹீட் டிரீட்டர், மெக்கானிக், ஷீட் மெட்டல் ஒர்க்கர், பைப்பிட்டர் போன்ற பிரிவில் ஆட்கள் சேர்க்கப்படுகிறார்கள். ஒவ்வொரு பிரிவுக்கு மான பணியிட எண்ணிக்கையை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

இந்த பயிற்சிப்பணியில் சேர விரும்புபவர்கள் 1-4-1998 மற்றும் 1-4-2005 ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 1-4-1993-க்கு பின்னர் பிறந்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படிப்பில் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துவிட்டு அதன் நகலுடன், குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்ப படிவத்தை கப்பல் தள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 5-12-2018-ந் தேதி கடைசிநாளாகும். நகல் விண்ணப்பம் 12-12-2018-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.

இது பற்றிய விரிவான விவரங்களை https://www.indiannavy.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

இந்தியன் ஆயில் நிறுவனம்

இந்தியன் ஆயில் கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். எனப்படுகிறது. இதன் மேற்கு மண்டலத்தில் தற்போது அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு வி்ண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பிரிவுகளில் மொத்தம் 307 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் மகாராஷ்டிராவில் 177 இடங்களும், கோவாவில் 9 இடங்களும், குஜராத்தில் 118 இடங்களும், உத்தரகாண்டில் 3 இடங்களும் உள்ளன.

இந்த பயிற்சிப் பணியிடங்களில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 27-11-2018-ந் தேதியில் 18 வயது முதல் 24 வயது வரை இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

12-ம் வகுப்பு தேர்ச்சியுடன், 2 ஆண்டு ஐ.டி.ஐ. படிப்பு படித்தவர்கள் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கும், 3 ஆண்டு என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் டெக்னீசியன் பயிற்சிப் பணிக்கும், 3 ஆண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள் அக்கவுண்டன்ட் பிரிவு பயிற்சிப் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 27-11-2018-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க கடைசி நாளாகும். https://www.iocl.com/ என்ற இணையதள பக்கத்தில் விரிவான விவரங்களை பார்த்து விட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

காப்பீட்டு நிறுவனம்

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட். இந்த நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 150 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-11-2018-ந் தேதியில் 21 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஓ.பி.சி. பிரிவினருக்கு வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு அனுமதிக்கப்படும்.

வணிகவியல் பட்டப்படிப்பு படித்தவர்கள், சி.ஏ. இன்டர்மீடியட் அளவிலான தேர்வை எதிர்கொண்டவர்கள் இந்த பயிற்சிப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 100 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. விருப்பமுள்ளவர்கள் 27-11-2018-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் தேர்வு டிசம்பர் அல்லது ஜனவரியில் நடத்தப்படும் என்று தெரிகிறது. இது பற்றிய விவரங்களை https://nationalinsuranceindia.nic.co.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Next Story