குளித்தலையில் லாரி மோதி ரெயில்வேகேட் சேதம் போக்குவரத்து பாதிப்பு


குளித்தலையில் லாரி மோதி ரெயில்வேகேட் சேதம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 22 Nov 2018 10:45 PM GMT (Updated: 22 Nov 2018 8:01 PM GMT)

குளித்தலையில் லாரி மோதி ரெயில்வேகேட் சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை சுங்ககேட் அருகே ரெயில்வே கேட் ஒன்று உள்ளது. இந்த ரெயில்வே கேட் மேலும், கீழும் தூக்கி இறக்கும் வகையில் அமைப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று மதியம் சுமார் ஒரு மணியளவில் இந்த ரெயில்வே கேட்டை கடந்து செல்ல வந்த லாரி ஒன்று மேலே தூக்கப்பட்ட நிலையில் இருந்த ரெயில்வே கேட்மீது மோதியது.

இதில் ரெயில்வே கேட் சேதமடைந்தது. இதையறிந்த லாரி டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றுவிட்டார். இந்த கேட் சேதமடைந்ததால் இதன் இருபுறமும் உள்ள சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த குளித்தலை போலீசார் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தினர்.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பட்டது. அதன்பேரில் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடைந்த ரெயில்வே கேட்டை சரிசெய்யும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். இச்சமயத்தில் இவ்வழியாக ரெயில் வரும்போது வாகனங்கள் செல்லாத வகையில் இரும்பு சங்கிலியைக் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டன. சில மணிநேரத்திற்கு பிறகு உடைந்த ரெயில்வேகேட் சரிசெய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இச்சம்பவத்தால் குளித்தலை - மணப்பாறை சாலையில் சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story