புயல் நிவாரண பணியில் மெத்தனம்: பெண் தாசில்தார் தற்காலிக பணி நீக்கம் கலெக்டர் நடவடிக்கை


புயல் நிவாரண பணியில் மெத்தனம்: பெண் தாசில்தார் தற்காலிக பணி நீக்கம் கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 23 Nov 2018 4:30 AM IST (Updated: 23 Nov 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் கஜா புயல் நிவாரண பணியில் மெத்தனமாக செயல்பட்ட பெண் தாசில்தாரை தற்காலிக பணிநீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, வடுவூர் பகுதிகள் கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் ஏராளமான தென்னை மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு அதிகாரிகள் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் மன்னார்குடி தாசில்தார் ஸ்ரீதேவிக்கு(வயது 50), மன்னார்குடியில் நிவாரண பணிகளை கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்த பணியில் அவர் மெத்தனமாக செயல்பட்டது தெரிய வந்தது.

இதனால் தாசில்தார் ஸ்ரீதேவியை தற்காலிக பணிநீக்கம் செய்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். கஜா புயல் நிவாரண பணியில் மெத்தனமாக செயல்பட்ட பெண் தாசில்தார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் திருவாரூர் மாவட்ட அரசு அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தாசில்தார் மீதான நடவடிக்கையை திரும்ப பெறக்கோரி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலம் முன்பு நேற்று இரவு 11 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வருவாய்த்துறை ஊழியர்கள் 50 பேர் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயல் நிவாரண பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் காமராஜ், கே.சி.வீரமணி, கலெக்டர் நிர்மல்ராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த வருவாய்த்துறை ஊழியர்கள் கூட்டத்தை புறக்கணித்து தாசில்தார் மீதான நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story