வேதாரண்யம் பகுதி மீனவ கிராமங்களில்: கஜா புயலுக்கு 2 ஆயிரம் படகுகள் சேதம் - மீனவர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம்


வேதாரண்யம் பகுதி மீனவ கிராமங்களில்: கஜா புயலுக்கு 2 ஆயிரம் படகுகள் சேதம் - மீனவர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம்
x
தினத்தந்தி 23 Nov 2018 10:00 PM GMT (Updated: 23 Nov 2018 8:14 PM GMT)

வேதாரண்யம் பகுதி மீனவ கிராமங்களில் கஜா புயலில் சிக்கி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் அவர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வேதாரண்யம், 

கஜா புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் பாதிக்கப்படாதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள், மீனவர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த புயலால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

குறிப்பாக கஜா புயலுக்கு வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டார அனைத்து கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை, கோடியக்காடு, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

கோடியக்கரை பகுதிகளில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன. வெளியூரை சேர்ந்த மீனவர்கள் இங்கு வந்து தங்கியிருந்து மீன்பிடி தொழிலில் செய்து வருகிறார்கள். கோடியக்கரை மற்றும் கோடியக்காடு பகுதிகளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தற்போது இந்த பகுதிகளில் மீனவர்களின் படகுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. மேலும் மீனவர்களின் வலைகள், படகில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார்கள், வலைகள் போன்றவையும் சேதம் அடைந்துள்ளன. இதேபோல ஆறுகாட்டுத்துறை புஷ்பவனம் உள்ளிட்ட பகுதிகளிலும் மீனவர்களின் படகுகள், வலைகள், மோட்டார்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.

இந்த 4 கிராமங்களில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் மீனவர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டம் காரணமாக மீனவர்கள் படகுகள் மற்றும் வலைகளை சரி செய்து மீன்பிடிக்க செல்ல இன்னும் 2 மாதத்துக்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து கோடியக்கரை மீனவர் சங்க முன்னாள் தலைவர் சித்திரவேல் கூறியதாவது:-

கஜா புயல் காரணமாக மீனவர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மீனவர்களின் படகுகள், வலைகள், மோட்டார் என்ஜின்கள், வெளியூர் மீனவர்கள் தங்கியிருந்த கட்டிடங்கள் ஆகியவை சேதம் அடைந்துள்ளன. கோடியக்காடு மற்றும் கோடியக் கரைக்கு செல்ல தற்போது வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சாலை மட்டும் உள்ளது. எங்களுக்கு மாற்று வழிக்கு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். மீன்பிடி இறங்குதளம் அமைத்து கொடுக்க வேண்டும். மீன்பிடி துறைமுகம் மற்றும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்.

கோடியக்காடு மற்றும் கோடியக்கரை பகுதியில் மீனவர்களின் அனைத்து வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி இதை சார்ந்த கருவாடு உற்பத்தி, ஐஸ் உற்பத்தி, சிறு மீன் வியாபாரிகள், தொழிலாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story