பண்ருட்டி அருகே 7 குழந்தைகளின் தாய், நீரில் மூழ்கி பலி போலீசார் விசாரணை


பண்ருட்டி அருகே 7 குழந்தைகளின் தாய், நீரில் மூழ்கி பலி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 25 Nov 2018 4:00 AM IST (Updated: 25 Nov 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே 7 குழந்தைகளின் தாய், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

பண்ருட்டி, 

பண்ருட்டி அருகே காட்டுக்கூடலூர் பழைய காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ரஜனா (40). இவர்களுக்கு திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகிறது. பிரேமா (21), சூர்யா (19), திவ்யா (18), ரம்யா (12), காவ்யா (7), அனு (11) ஆகிய 6 மகள்கள் உள்ளனர். மேலும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரஜனாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டது.

இவர்களில் பிரேமாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. சூர்யா இறுதியாண்டு பொறியியல் படிப்பு படித்து வருகிறார்.

அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறந்ததால் முருகன்-ரஜனா தம்பதி ஆண் குழந்தை வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்துள்ளனர். இந்த நிலையில் ரஜனா மீண்டும் கர்ப்பமானார். கடந்த 40 நாட்களுக்கு முன்பு ரஜனா அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.


இந்த நிலையில் வீட்டில் இருந்த ரஜனா, நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகைக்கு சென்றார். அப்போது அங்குள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நின்றது. இதை அறியாத ரஜனா அந்த வழியாக சென்ற போது அந்த பள்ளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி, மயங்கினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருங்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ரஜனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரய்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 7 குழந்தைகளின் தாய் பள்ளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story