கஜா புயலால் சூறையாடப்பட்டு 10 நாட்களாகியும் சீரமைக்கப்படாத புதுக்கோட்டை ரெயில் நிலையம் குண்டு வெடிப்பில் சிதைந்தது போல் காட்சி அளிக்கிறது


கஜா புயலால் சூறையாடப்பட்டு 10 நாட்களாகியும் சீரமைக்கப்படாத புதுக்கோட்டை ரெயில் நிலையம் குண்டு வெடிப்பில் சிதைந்தது போல் காட்சி அளிக்கிறது
x
தினத்தந்தி 25 Nov 2018 10:15 PM GMT (Updated: 25 Nov 2018 8:13 PM GMT)

கஜா புயலால் சூறையாடப்பட்டு 10 நாட்களாகியும் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தின் கூரைகள் இன்னும் சீரமைக்கப்படாமல் குண்டு வெடிப்பில் சிதைந்தது போல் காட்சி அளிக்கிறது.

புதுக்கோட்டை,

வங்க கடலில் உருவாகி, அங்கிருந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் வந்து திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் கடந்த 16-ந்தேதி அதிகாலை முதல் கோரத்தாண்டவம் ஆடி ஒரு உலுக்கு உலுக்கி விட்டு, கேரள மாநிலம் கொச்சி வழியாக அரபிக்கடலில் அமைதி அடைந்தது கஜா புயல். இந்த புயலால் டெல்டா மாவட்டங்கள் ஒட்டுமொத்தமாக புரட்டி போடப்பட்டன. அழகாக வடிவமைக்கப்பட்ட நகரம் என்ற பெருமைக்குரிய புதுக்கோட்டை மாவட்டமும் கஜா புயலின் கோர கரங்களில் சிக்கி லட்சக்கணக்கான தென்னை மரங்கள், முந்திரி மரங்கள், தைல மற்றும் சவுக்கு மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து தங்களது வாழ்க்கையை முடித்துக்கொண்டன. ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் ஒரே நேரத்தில் சரிந்து விழுந்ததால் மாவட்டம் முழுவதும் மின் துண்டிப்பால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. புதுக்கோட்டை நகரம் தவிர பெரும்பாலான கிராமங்கள் இன்னமும் இருளில் மூழ்கிய நிலையில் தான் உள்ளன.

சரிந்து விழுந்த மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பங்களை அப்புறப்படுத்தி விட்டு, புதிய கம்பங்கள் நடும் பணியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்வாரிய தொழிலாளர்கள் மட்டும் இன்றி, அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வந்துள்ள தொழிலாளர்களும் களத்தில் இறங்கி உள்ளனர். சாலை ஓரங்களில் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஆனாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை, ஆலங்குடி உள்பட பல பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் சோகத்தில் தான் சிக்கி தவிக்கிறார்கள்.

கஜா புயலால் புதுக்கோட்டை ரெயில் நிலையமும் பயங்கரமாக சூறையாடப்பட்டு உள்ளது. திருச்சி-காரைக்குடி-ராமேஸ்வரம் வழித்தடத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையமான புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் உள்ளன. இந்த 3 நடைமேடைகளிலும் உள்ள மேற்கூரைகளும், நடைமேம்பாலத்தின் கூரைகளும் கஜா புயலை தாக்குப்பிடிக்க முடியாமல் குண்டு வெடிப்பில் சிக்கியது போல் சிதைந்து போய் உள்ளன. மேற்கூரைகளின் உடைந்த பகுதிகள் அனைத்தும் தண்டவாளங்களில் சிதறி கிடக்கின்றன. ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் சரிந்து விழுந்த இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான கூடாரமும் இன்னும் சீரமைக்கப்படவில்லை.

புதுக்கோட்டையில் ரெயில் ஏறுவதற்காக வரும் பயணிகள் மழையில் நனைந்து கொண்டு தான் நிற்கவேண்டியது உள்ளது. புயலால் பாதிக்கப்பட்டு 10 நாட்களாகியும் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தின் சேதம் அடைந்த மேற்கூரைகளை அதிகாரிகள் யாரும் சீரமைக்க முன்வராதது ரெயில் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story