திருவாரூரில் தீவிபத்து பழைய டயர்கள் வைத்திருந்த கூரை கொட்டகை-2 வீடுகள் எரிந்து சாம்பல் ரூ.8 லட்சம் பொருட்கள் சேதம்


திருவாரூரில் தீவிபத்து பழைய டயர்கள் வைத்திருந்த கூரை கொட்டகை-2 வீடுகள் எரிந்து சாம்பல் ரூ.8 லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 26 Nov 2018 11:00 PM GMT (Updated: 26 Nov 2018 8:10 PM GMT)

திருவாரூரில் நடந்த தீ விபத்தில் பழைய டயர்கள் வைத்திருந்த கூரை கொட்டகை- 2 வீடுகள் எரிந்து சாம்பலானது. இதில் ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

திருவாரூர், 

திருவாரூர் நெய்விளக்கு தோப்பு பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் நாகை பைபாஸ் சாலையில் டயர் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையின் அருகில் பழைய டயர்களை ஒரு கூரை கொட்டகையில் இருப்பு வைத்திருந்தார். நேற்று மதியம் இந்த கூரை கொட்டகையில் இருந்து திடீரென கரும்புகை எழுந்தது. இதனை தொடர்ந்து தீ கொழுந்து விட்டு எரிந்தது.

இதனை கண்ட அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். இதற்குள் தீப்பொறி பறந்து அருகில் இருந்து கூரை வீடுகளில் பட்டு தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க முயன்றனர். தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால் 3 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் பழைய டயர் வைத்திருந்த கூரை கொட்டகை மற்றும் மணிமாறன், சுமதி ஆகியோருடைய கூரை வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. பழைய டயர் தீப்பிடித்து எரிந்ததால் அதிக அளவு கரும்புகை வெளியேறியது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர். இந்த வழியாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த தீ விபத்தில் டயர்கள் மற்றும் வீடுகளில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதன் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் கடை அருகில் இருந்த மின் கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட தீப்பொறியால் தீப்பிடித்து இருக்கலாம் என தெரிகிறது.

Next Story