மேகமலை சரணாலய பகுதியில்: மின்சாரம் பாய்ந்து 2 யானைகள் பலி
மேகமலை வன உயிரின சரணாலய பகுதியில் மின்சாரம் பாய்ந்து 2 யானைகள் பரிதாபமாக இறந்தன.
கம்பம்,
மேகமலை வன உயிரின சரணாலயத்தில் சிறுத்தை, புலி, மான், யானை, காட்டெருமை, காட்டுப்பன்றி, கரடி உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. மேலும் பல்வேறு அரியவகை மரங்களும் உள்ளன. இதனால் வனத்துறையினர் அடிக்கடி ரோந்து பணி மேற்கொள்வது வழக்கம்.
அதன்படி நேற்று கம்பம் கிழக்கு வனச்சரகத்திற்குட்பட்ட வெண்ணியாறு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கம்பம் கிழக்கு வனச்சரகம், வெண்ணியாறு கிழக்கு மற்றும் வெண்ணியாறு மேற்கு பிரிவின் இணைப்பு பகுதியில், சுருளியாறு மின் நிலையத்திலிருந்து செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளுக்கு அடியில் மின்சாரம் பாய்ந்து சுமார் 12 முதல் 14 வயதுடைய 2 பெண் யானைகள் இறந்து கிடந்தன.
இதுகுறித்து அவர்கள் கம்பம் கிழக்கு வனச்சரகர் தினேசுக்கு தகவல் கொடுத்தனர். அவர் யானைகள் இறந்தது குறித்து மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். நேற்று இரவு நேரமாகிவிட்டதால் சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் செல்ல இயலவில்லை.
இதையடுத்து மேகமலை வன உயிரின சரணாலய காப்பாளர் கலாநிதி, வன உயிரின சரணாலய உதவி வன பாதுகாவலர் குகணேஷ், வனச்சரகர் தினேஷ், பிரேத பரிசோதனை செய்ய கால்நடை டாக்டர் செல்வம் ஆகியோர் சுருளி அருவியில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் யானைகள் இறந்து கிடக்கும் இடத்திற்கு வனப்பகுதி வழியாக நடந்து செல்ல உள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் இதே இடத்தில் ஒரு பெண் யானை குட்டியுடன் மின்சாரம் பாய்ந்து பலியானது. இதேபோல் செப்டம்பர் மாதம் 9 வயதுடைய ஒரு பெண் யானையும் அதே இடத்தில் மின்சாரம் பாய்ந்து பலியானது. மின்சாரம் பாய்ந்து தொடர்ந்து யானைகள் பலியாகும் சம்பவம் வன ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயர்அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்வதே யானைகள் உயிரிழப்புக்கு காரணம் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story