வேதாரண்யம் நகராட்சியில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப பணிகள் தீவிரம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்


வேதாரண்யம் நகராட்சியில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப பணிகள் தீவிரம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
x
தினத்தந்தி 28 Nov 2018 10:45 PM GMT (Updated: 28 Nov 2018 7:40 PM GMT)

வேதாரண்யம் நகராட்சியில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் இயல்புநிலைக்கு திரும்பும் வகையில் தீவிரமாக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதியில் வீடுகள், மின்விளக்குகள், குடிநீர் குழாய்கள், சாலைகள் மற்றும் குடிசை வீடுகள் சேதமடைந்தன. சாலையோரம் மரங்கள் விழுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் செயல்பட, மாவட்ட நகராட்சி ஆணையங்களும், பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர். அவர்களுடன் நகராட்சி நிர்வாக ஆணையர்கள், 4 என்ஜினீயர்கள் நகரமைப்பு அலுவலர்கள் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் கொண்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 105 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 61.45 டன் அரிசி, 5.25 டன் காய்கறிகள், 32.25 டன் மளிகை பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து வேதாரண்யம் நகராட்சியில் வார்டு வாரியாக நகரமைப்பு அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களை கொண்டு பாதிப்புகள் குறித்த கணக்கெடுக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. அந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் சேதமடைந்த வீடுகளுக்கு தேவையான, கீற்று, ஓடு மற்றும் சிமெண்டு சீட்டு ஆகியவைகளை உடனடியாக மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முகாம்களில் உள்ளவர்களை குடியிருப்புகளுக்கு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நகராட்சிகளில் இருந்து துப்புரவு பணியாளர்கள் வாகனங்களில் வரவழைக்கப்பட்டு 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட குப்பைகள் அகற்றும் பணிகள் முடிவடைந்துள்ளது.

இதுவரை 1,540 டன் குப்பைகள் அகற்றப்பட்டு சுகாதார நடவடிக்கைக்காக 21 வார்டு பகுதிகளில் பிளச்சிங் பவுடர் தூவப்பட்டுள்ளது. கால்வாய்கள், சாக்கடை கழிவுகளில் 230 லிட்டர் பினாயில் தெளிக்கப்பட்டுள்ளது. நோய் பரவாமல் தடுக்க அனைத்து வார்டுகளிலும் கொசு புகை மருந்து அடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மக்களுக்கு தேவையான குடிநீர் நபர் ஒன்றுக்கு 70 முதல் 82 லிட்டர் வரை வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் வழங்க இயலாத பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மழைநீர் தேங்கியுள்ளதை டீசல் என்ஜின்கள் மூலம் வெளியேற்ற நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story