லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதல்: பிரியாணி கடைக்காரர் பரிதாப சாவு 2 பேர் படுகாயம்


லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதல்: பிரியாணி கடைக்காரர் பரிதாப சாவு 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 3 Dec 2018 3:45 AM IST (Updated: 3 Dec 2018 3:14 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சத்திரம் அருகே லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் பிரியாணி கடைக்காரர் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முல்லாசாதி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நிஜாமுதின் (வயது 37). இவர் அங்கு பிரியாணி கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு நிஜாமுதின் தனது நண்பர்கள் இப்ராஹிம், சித்திக் ஆகியோருடன் களங்காணியில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டுக்கு வந்தார்.

பின்னர் 3 பேரும் மோட்டார்சைக்கிளில் ராசிபுரம் திரும்பி கொண்டு இருந்தனர். நிஜாமுதின் மோட்டார்சைக்கிளை ஓட்டினார். அவர்கள் இருவரும் பின்னால் அமர்ந்து பயணம் செய்தனர்.

பரிதாப சாவு

இவர்களது மோட்டார்சைக்கிள் புதுச்சத்திரம் அருகே உள்ள ரெட்டிப்புதூர் பகுதியில் சென்றபோது சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணம் செய்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிஜாமுதின் மேல்சிகிச்சைக்காக ராசிபுரம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

2 பேர் படுகாயம்

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இப்ராஹிம், சித்திக் ஆகிய இருவருக்கும் நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் இறந்த நிஜாமுதினுக்கு யாஸ்மின் (35) என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story