இலவச வீட்டுமனை கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்


இலவச வீட்டுமனை கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
x
தினத்தந்தி 3 Dec 2018 11:00 PM GMT (Updated: 3 Dec 2018 8:11 PM GMT)

இலவச வீட்டுமனை வழங்கக்கோரி அயன்பேரையூர் கிராம பெண்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் (பொறுப்பு) அழகிரிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது வேப்பந்தட்டை தாலுகா அயன்பேரையூர் ஆதிதிராவிடர் தெருவில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வந்து இலவச வீட்டுமனை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களில் 5 பேரை மட்டும் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க போலீசார் அனுமதி கொடுத்தனர். இதையடுத்து இலவச வீட்டுமனை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அழகிரிசாமியிடம் ஒரு மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

ஆலத்தூர் தாலுகா இலுப்பைக்குடியை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் கொடுத்த மனுவில், கூத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலமாக கறவை மாட்டு கடனாக 20 நபருக்கு தலா ரூ.90 ஆயிரம் வழங்க கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அரசு அனுமதியளித்தது. அதில் தலா ரூ.45 ஆயிரம் வீதம் 20 பேருக்கு வழங்கப்பட்டது. இதற்கு பங்குதொகையாக எங்களிடம் தலா ரூ.9 ஆயிரம் வீதம் கூட்டுறவு வங்கி மூலம் வசூலிக்கப்பட்டது.

ஆனால் ஒரு தவணை கறவை மாட்டு கடனை கொடுத்து விட்டு 20 மாதம் ஆகியும், அடுத்த தவணை கறவை மாட்டு கடனை வழங்கவில்லை. ஆனால் பால் பண்ணையில் எங்களுக்கு 2 தவணை மாட்டு கடன் வழங்கியதாக கூறி, ஒரே மாதத்தில் ரூ.3 ஆயிரம் வீதம் பிடித்து செய்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மேலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டு மனைப்பட்டா கோருதல் உள்பட 367 மனுக்களை கலெக்டர் அழகிரிசாமியிடம் பொது மக்கள் வழங்கினர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் கடந்த ஜூலை மாதம் சென்னை, பரங்கிமலை ரெயில் நிலைய பக்கவாட்டு சுவர் மோதி படுகாயமடைந்த குன்னம் தாலுகா, லப்பைக்குடிக்காட்டை சேர்ந்த முகமதுயாசருக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். அப்போது தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மனோகரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story