வெளிநாட்டு வங்கியில் கடன் வாங்கி தருவதாக: தொழில் அதிபரிடம் ரூ.7½ லட்சம் மோசடி - தம்பதி மீது வழக்கு


வெளிநாட்டு வங்கியில் கடன் வாங்கி தருவதாக: தொழில் அதிபரிடம் ரூ.7½ லட்சம் மோசடி - தம்பதி மீது வழக்கு
x
தினத்தந்தி 4 Dec 2018 3:00 AM IST (Updated: 4 Dec 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டு வங்கியில் இருந்து ரூ.10 கோடி கடன் வாங்கி தருவதாக தொழில் அதிபரிடம் ரூ.7½ லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிங்காநல்லூர், 

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 45), தொழில் அதிபர். இவருக்கு சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் அறிமுகம் ஆனார். அவர் வினோத்குமாரிடம் நான் வெளிநாட்டில் உள்ள வங்கிகளில் இருந்து பலருக்கு தொழில் செய்ய கடன் வாங்கி கொடுத்து வருகிறேன். உங்களுக்கு ஏதாவது கடன் வேண்டுமா? என்று கேட்டு உள்ளார்.

அதற்கு வினோத்குமார், தற்போது எனக்கும் தொழிலில் சரிவு ஏற்பட்டு உள்ளது. எனவே ரூ.10 கோடி கடன் கிடைத்தால் சரிந்த தொழிலை மீட்டு நல்ல நிலைக்கு வந்து விடுவேன் என்று கூறி உள்ளார். அதற்கு அந்த நபர் ரூ.10 கோடிக்கு ரூ.10 லட்சம் கமிஷனாக கொடுக்க வேண்டும். எனவே பணம் மற்றும் நீங்கள் செய்து வரும் தொழில் குறித்த ஆவணங்களை உடனடியாக கொடுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.

உடனே வினோத்குமார் ரூ.7½ லட்சம் மற்றும் ஆவணங்களை அந்த நபரிடம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர் ஒரு மாதத்துக்குள் ரூ.10 கோடி கிடைத்து விடும் என்று கூறி உள்ளார். ஆனால் ஒரு மாதம் ஆகியும் பணம் கிடைக்கவில்லை. உடனே வினோத்குமார் அந்த நபரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார்.

அப்போது அந்த நபரின் மனைவி என்று கூறி ஒரு பெண் செல்போனில் பேசினார். அவர், கடன் கொடுப்பது தொடர்பாக ஆவணங்கள் வங்கியில் பரிசீலனையில் உள்ளது. 10 நாட்களுக்குள் உங்களுடைய வங்கி கணக்குக்கு பணம் செலுத்தப்படும் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் பணம் கிடைக்கவில்லை. பலமுறை அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது கடன் கிடைத்துவிடும் என்றே பதில் கூறி உள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த வினோத்குமார், எனக்கு கடன் வேண்டாம், நான் கொடுத்த ரூ.7½ லட்சத்தை திரும்ப கொடுங்கள் என்று கேட்டு உள்ளார். அதை கொடுக்க மறுத்த அந்த நபர் தனது மனைவியுடன் தலைமறைவாகி விட்டார். இது குறித்து வினோத்குமார் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்- மனைவியை தேடி வருகிறார்கள்.

Next Story