உடுமலை அருகே உண்டு உறைவிடப்பள்ளியில் ஒரே அறையில் பகலில் படிப்பு; இரவில் தூங்கும் மாணவர்கள் கிடப்பில் கிடக்கும் புதிய கட்டிட பணிகள் விரைவுப்படுத்தப்படுமா?


உடுமலை அருகே உண்டு உறைவிடப்பள்ளியில் ஒரே அறையில் பகலில் படிப்பு; இரவில் தூங்கும் மாணவர்கள் கிடப்பில் கிடக்கும் புதிய கட்டிட பணிகள் விரைவுப்படுத்தப்படுமா?
x
தினத்தந்தி 4 Dec 2018 3:45 AM IST (Updated: 4 Dec 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை அருகே உண்டு உறைவிடப்பள்ளியில் ஒரே அறையில் பகலில் கல்வி கற்கும் மாணவர்கள் அதே அறையில் இரவில் தூங்குகிறார்கள். கிடப்பில் கிடக்கும் புதிய கட்டிட பணிகள் விரைவுப்படுத்த சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

போடிபட்டி,

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான இங்கு குழிப்பட்டி, மாவடப்பு, தளிஞ்சி, கோடந்தூர் உள்ளிட்ட ஏராளமான மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் மலைவாழ் மக்களின் மேம்பாட்டுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் மலைவாழ் மக்களின் குழந்தைகள் கல்வி கற்கும் வகையில் உடுமலையை அடுத்த ஜல்லிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கொங்குரார்குட்டை பகுதியில் உண்டு, உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் தற்போது 23 மாணவர்கள் படித்து வருகிறார்கள். மேலும் இந்த பள்ளியில் வால்பாறை உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த மாணவ–மாணவிகளும் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பள்ளியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாததால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அத்துடன் பல மாணவர்கள் படிப்பை பாதியிலேயே விட்டு, விட்டு ஓடி விடுவதாக கூறப்படுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:–

கொங்குரார் குட்டை உண்டு உறைவிடப்பள்ளிக்கு செல்லும் பாதை மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த வழித்தடத்தையொட்டி புதர் மண்டி கிடக்கிறது. இதனால் பாம்பு உள்ளிட்ட வி‌ஷஐந்துகள் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து விடுகிறது. மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள சமையல் அறை, சாப்பிடும் அறை ஆகியவை கட்டப்பட்டு 17 ஆண்டுகள் ஆகிறது. தற்போது மேற்கூரைகள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

இதனால் மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் முன்புறமுள்ள பகுதியிலேயே உட்கார்ந்து சாப்பிடும் நிலை உள்ளது. ஆனால் மாற்று வழியில்லாததால் சமையல் அறை மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் அடிக்கடி பெயர்ந்து விழும் மேற்கூரையால் மிகவும் அச்சத்துடனே பணியாற்றி வருவதாக சமையலர் தெரிவிக்கிறார். பகலில் கல்வி கற்கும் அதே வகுப்பறையில் தான் இரவு மாணவர்கள் தங்கும் அவல நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவர்கள் தங்குவதற்கான அறைகள் மற்றும் சமையலறை புதிதாக கட்டும் பணிகள் பல மாதங்களாகவே முடிக்கப்படாமல் கிடப்பில் உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி உண்டு, உறைவிடப்பள்ளி வளாகம் வரை சீராக சாலை அமைக்கவும், கட்டிட பணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story