மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் 552 எக்டேரில் மஞ்சள் சாகுபடி அறுவடைக்கு தயாராகி வருகிறது + "||" + In the Perambalur district, 552 hectares are ready for harvesting

பெரம்பலூர் மாவட்டத்தில் 552 எக்டேரில் மஞ்சள் சாகுபடி அறுவடைக்கு தயாராகி வருகிறது

பெரம்பலூர் மாவட்டத்தில் 552 எக்டேரில் மஞ்சள் சாகுபடி அறுவடைக்கு தயாராகி வருகிறது
பெரம்பலூர் மாவட்டத்தில் 552 எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட மஞ்சள் அறுவடைக்கு தயாராகி வருகிறது.
பெரம்பலூர்,

சமையலுக்கு சுவையூட்டவும் (விரலி மஞ்சள்), மருத்துவ குணங்களை கொண்டதும்(பனங்காழி மஞ்சள்), கிருமி நாசினியாகவும், மங்கலப்பொருட்களில் ஒன்றாகவும்(கிழங்கு மஞ்சள்) பயன் படுத்தப்படும் பணப்பயிரான மஞ்சள் சாகுபடியில் ஈரோடு மாவட்டம் தமிழகத்தில் முதலிடத்தை வகிக்கிறது. நீர்வளம் மிக்க பகுதிகளில் பயிரிடப்படும் 8 முதல் 10 மாத பயிரான மஞ்சள் பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 552 எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராகி வருகிறது.


பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை வட்டாரத்தில் விசுவக்குடி அருகே பச்சைமலை அடிவாரத்தில் உள்ள மலையாளப்பட்டி, அரும்பாவூர், பூலாம்பாடி, அன்னமங்கலம், கவுண்டர்பாளையம், தொண்டமாந்துறை, நெற்குணம் உள்பட கல்லாறு- வெள்ளாற்றங்கரை ஓர கிராமங்கள், பெரம்பலூர் வட்டாரத்தில் உள்ள பெரம்பலூர், எசனை, சோமண்டாபுதூர், செங்குணம், புதுநடுவலூர், சிறுவாச்சூர், அம்மா பாளையம், மேலப்புலியூர், வேப்பூர் வட்டாரத்தில் வெள்ளாற்றங் கரையோர கிராமங்களில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2017-18-ம் ஆண்டில் 566 எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட மஞ்சள் பயிர், நடப்பு 2018-19-ம் நிதிஆண்டில் 552 எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதத்தில் மஞ்சள் ரைசோம்கள் விதைக்கப்பட்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது.

ஒரு ஏக்கருக்கு ஏறத்தாழ ரூ.50 ஆயிரம் வரை சாகுபடி செலவாகிறது. 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாசனம், குறைவான பராமரிப்பு செலவு, கூடுதல் கவனம், இவற்றை முழுமையாக கையாண்டு ஒரு ஏக்கருக்கு 20 டன்கள் சாகுபடி பெறமுடிந்தாலும், இதில் நான்கில் ஒரு பங்கு அதாவது 4 முதல் 5 டன் பதப்படுத்தப்பட்ட மஞ்சள் கிடைக்கும், ஈரோடு மாவட்டத்தில் பராமரிப்பு செலவு மற்றும் தண்ணீர் பாய்ச்சும் நேரம் இவற்றை எளிதாக்கும் வகையில் சொட்டுநீர் பாசன முறையில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது.

பெரம்பலூர் மற்றும் துறையூர் பகுதிகளில் கை விரல் உருவம் கொண்ட விரலி மஞ்சள் ரகம் அதிகம் பயிரிடப்படு கிறது. ஈரோடு மஞ்சள் மார்க்கெட் மூலம் தற்போது ஒரு கிலோவிற்கு பச்சை மஞ்சள் ரூ.32 முதல் ரூ.35 வரையும், பாய்லரில் வேகவைத்து பதப்படுத்தப்பட்டு பாலீஸ் செய்யப்பட்ட மஞ்சள் ஒரு கிலோ ரூ.80 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்காக இலையுடன் கூடிய மஞ்சள் புத்தாண்டின் முதல் வாரத்தில் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்காக உள்ளூர் சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் 2019 தை மற்றும் மாசி மாதத்தில் வெளிச்சந்தையில் மொத்த விற்பனை செய்திட அறுவடைக்கு தயாராகி வருகிறது.

ஆண்டுதோறும் ஏற்படும் பருவநிலை மாற்றம், வாழ்க்கை முறையில் மாற்றம், மேற்கத்திய நாகரிக தாக்கம் இன்னும் பல்வேறு மாற்றங்கள் நம்மிடையே புகுந்துவிட்டாலும் நமது பாரம்பரிய தோட்டப்பயிரான மஞ்சளுக்கு, மக்களிடம் உள்ள மவுசும், பயன் பாடும் நீடித்து நிற்கிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...