உள்ளாட்சி தேர்தல் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை புதுவை அரசு அவமதித்துள்ளது - கவர்னர் பேட்டி
உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை புதுவை அரசு அவமதித்துள்ளது என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடி நேற்று காலை புதுவை – கடலூர் சாலையில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு திடீரென வந்தார். அப்போது அங்கு கூண்டில் அடைத்து வைத்து பராமரிக்கப்பட்டு வரும் மான்கள், பாம்பு, மயில், குரங்கு, காட்டுநாய் மற்றும் பறவைகளை பார்வையிட்டார்.
அதிகாரிகளிடம் விலங்குகளுக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் அதற்கு வழங்கும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது விலங்குகளை வைத்து பராமரிக்கப்பட்டு வரும் பகுதி தூய்மை இல்லாமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்ததுடன், வனத்துறை வளாகத்தை தூய்மை படுத்தி பள்ளி மாணவ–மாணவிகளை பார்வையிட அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அதன் அருகில் உள்ள வனப்பகுதியின் உள்ளே சென்று பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது வனத்துறை அதிகாரி குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் கவர்னர் கிரண்பெடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நகரின் மையப்பகுதியில் வனத்துறை அலுவலகத்தை ஒட்டி சிறப்பான வனப்பகுதி உள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வனத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் திருப்திகரமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டு விதித்த காலக்கெடு முடிவடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை புதுவை அரசு அவமதித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தான் காரணம். உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான கோப்பை முதல்–அமைச்சர் முடக்கி வைத்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் நிதி கிடைக்காமல் உள்ளது. இதனால் கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி புதுவைக்கு வந்த போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டுள்ளதா? என்று என்னிடம் கேட்டார். நான் இல்லை என்று கூறினேன். உடனே அவர் புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததற்கு அதிருப்தி தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.