புயலால் சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடம்: ஒரே அறையில் 114 மாணவர்கள் கல்வி பயிலும் அவலம்


புயலால் சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடம்: ஒரே அறையில் 114 மாணவர்கள் கல்வி பயிலும் அவலம்
x
தினத்தந்தி 5 Dec 2018 10:45 PM GMT (Updated: 5 Dec 2018 7:11 PM GMT)

புயலால் மேலதிருமதிகுன்னத்தில் உள்ள அரசு பள்ளி கட்டிடம் சேதமானது. இதனால் ஒரே அறையில் 114 மாணவர்கள் கல்வி பயிலும் அவலநிலை நிலவுகிறது.

கொரடாச்சேரி,

கொரடாச்சேரி ஒன்றியம் மேலதிருமதிகுன்னம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 114 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 80 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஒன்றும், 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் ஒன்றும் என 2 கட்டிடங்கள் மட்டுமே உள்ளது. இதில் ஒரு கட்டிடத்தில் உள்ள மேற்கூரை கஜா புயலால் சேதமடைந்தது. மற்றொரு கட்டிடமும் முழுவதும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. பள்ளி தலைமை ஆசிரியர் அறை மட்டுமே இந்த பள்ளியில் எந்தவித சேதமுமின்றி புயலில் இருந்து தப்பித்துள்ளது. தற்போது கொரடாச்சேரியில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது.

இதனால் மழை பெய்யும் நேரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் அறைக்குள்ளேயே 114 மாணவர்கள் கல்வி பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை இல்லாத நேரத்தில் பள்ளியின் வெளிப்புறங்களில் மரத்தின் அடியில் வகுப்புகள் செயல்படுகின்றன. எனவே உடனடியாக இப்பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கை ஆகும்.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது:-

கஜா புயலால் மேலதிருமதிகுன்னத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் உருக்குலைந்தது. எங்கள் குழந்தைகளின் கல்வி தடைபட கூடாது என்ற எண்ணத்தில் தான் நாங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம். சேதமடைந்த கட்டிடம் விழுந்து மாணவர்களுக்கு எதுவும் நடந்து விடுமோ என நாங்கள் தினமும் கவலைப்படுகிறோம்.

கும்பகோணம் பள்ளியில் நடந்த சம்பவம்போல் இங்கும் நடந்து விடக்கூடாது. அதற்கு முன்னதாகவே அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டிடம் கட்டித்தரப்படவில்லை என்றால் எங்களுடைய குழந்தைகளின் மாற்றுச்சான்றிதழை பெற்று கொண்டு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவாரூரில் மாணவர்களை சேர்க்க வேண்டிய நிலை உருவாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story