விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ரேடியாலஜி டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பு
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ரேடியாலஜி பிரிவில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் அந்த பணியிடத்தில் உடனடியாக டாக்டர்களை நியமனம் செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
விருதுநகர்,
தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கும் அரசு ஆஸ்பத்திரிகளில் உயர்தர சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நவீன வசதிகளை செய்து தருகிறது. அந்த வகையில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி என்ற அந்தஸ்தை பெற்று உள்ளதால் இந்த ஆஸ்பத்திரிக்கு நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், மெமோகிராபி போன்ற நவீன மருத்துவ கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனால் மாவட்டம் முழுவதும் இருந்து நோய் பாதிப்பு அடைந்த ஏழை, எளிய மக்கள் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு தேடிவரும் நிலை உள்ளது.
இந்தநிலையில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே, ஸ்கேன் கருவிகளை பயன்படுத்தி அறிக்கைகள் பெற்று உடனடியாக சிகிச்சைகள் தொடங்க வாய்ப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது. ரேடியாலஜி பிரிவில் நியமனம் செய்யப்பட்டுள்ள 2 டாக்டர்களும் நீண்டவிடுப்பில் சென்றுள்ளனர்.
பணி இடத்தில் நியமிக்கப்பட்டுள்ள டாக்டர்கள் விடுப்பில் சென்றுள்ளதால் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அருப்புக்கோட்டையில் இருந்து வரும் ரேடியாலஜி மருத்துவர் 2 நாட்களுக்கு ஒருமுறை தான் வந்து செல்ல வேண்டி நிலை உள்ளதால் மருத்துவ அறிக்கை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் உடனடி சிகிச்சை பெறவேண்டிய நோயாளிகள் அதை பெற முடியாமல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நோய் பாதிப்பு அடைந்தவர்கள் தனியார் ஸ்கேன் மையங்களுக்கு சென்று பணம் செலவு செய்து அறிக்கை பெற்று அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெறும் நிலை உள்ளது.
எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ரேடியாலஜி பிரிவில் உடனடியாக டாக்டர்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் அங்குள்ள டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் நவீன ஸ்கேன் மருத்துவ கருவிகள், பயன்பாடு இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுவிடும்.