ஜெயலலிதா நினைவுநாளில் திருச்சியில் பார்வையற்றோர் தட்டு ஏந்தி நூதன போராட்டம்


ஜெயலலிதா நினைவுநாளில் திருச்சியில் பார்வையற்றோர் தட்டு ஏந்தி நூதன போராட்டம்
x
தினத்தந்தி 5 Dec 2018 11:00 PM GMT (Updated: 5 Dec 2018 8:27 PM GMT)

ஜெயலலிதா நினைவுநாளில் கூட தங்களை யாரும் கண்டுகொள்ள வில்லை என திருச்சியில் பார்வையற்றோர் தட்டு ஏந்தி நூதன போராட்டம் நடத்தினர்.

திருச்சி,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி திருச்சியில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்தநிலையில் திருச்சி விமானநிலையம் பகுதியில் உள்ள லூப்ரா பார்வையற்றோர் நல மைய தலைவர் தாமஸ் தலைமையில் பார்வையற்றோர் பலர் திருச்சி கோர்ட்டு எம்.ஜி.ஆர். சிலை அருகே திடீர் போராட்டம் நடத்த கையில் தட்டுகளுடன் திரண்டு வந்தனர். தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் பாரதிதாசன் சாலையில் மாநகராட்சி அலுவலகம் எதிரே அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் போலீஸ் உதவி கமிஷனர் சச்சிதானந்தம், இன்ஸ்பெக்டர் பெரியய்யா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறுகையில், “அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் எங்களை தேடி வந்து ஓட்டு கேட்கிறார்கள். அப்போது எங்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். எம்.ஜி.ஆர். பிறந்தநாள், நினைவுநாள், ஜெயலலிதா பிறந்தநாள், நினைவுநாளில் உணவு வழங்குவதாக கூறி ஓட்டு கேட்டார்கள். இன்று (நேற்று) ஜெயலலிதாவின் நினைவுநாள். ஆனால் அ.தி.மு.க.வினர் எங்களை வந்து பார்க்கவில்லை. எங்களுக்கு பொதுமக்கள் அன்றாடம் உணவு அளித்து வருகிறார்கள். ஆனால் அரசியல்வாதிகளுக்கு ஏன்? அந்த எண்ணம் வரவில்லை. ஆகையால் எங்கள் தொகுதி வேட்பாளருக்கு எங்களது வருத்தத்தை தெரிவிக்கும் வகையில் தட்டு ஏந்தி கூடி நிற்பதற்காக செல்கிறோம்” என்றனர்.

இதையடுத்து போலீசார் அவர்களிடம், உணவு வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினர். அதற்கு அவர்கள், உங்களிடம் உணவு கேட்கவில்லை. ஜெயலலிதா நினைவுநாளில் கூட அரசியல்வாதிகள் ஏன்? எங்களை கண்டுகொள்ளவில்லை, எங்களுக்கு உணவு அளிக்க கூட மனமில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதனையடுத்து அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஜெயலலிதா நினைவுநாளான நேற்று தங்களுக்கு உணவு வழங்கவில்லை என்று கூறி திருச்சியில் பார்வையற்றோர் நடத்திய இந்த நூதன போராட்டம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story