பழனியில் பலத்த மழை: நல்லதங்காள் ஓடையில் வெள்ளப்பெருக்கு
பழனியில் பலத்த மழைக்கு நல்லதங்காள் ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஓடையின் குறுக்கே செல்லும் தரைப்பாலத்தை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
பழனி,
பழனியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. இரவு முழுவதும் இந்த மழை நீடித்தது. இதன் காரணமாக பழனியை அடுத்த கோம்பைபட்டி பகுதியில் உள்ள மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள நல்லதங்காள் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் சென்றது.
இதனால் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர். தண்ணீரின் வேகம் சற்று குறைவாக இருந்ததால் மினிபஸ், மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் மட்டும் பாலத்தை கடந்து சென்றனர். இதற்கிடையே இரவு முழுவதும் நீடித்த மழை நேற்று காலை 9 மணிக்கு மேல் நின்றது. இதையடுத்து ஓடையில் கரைபுரண்டு ஓடிய வெள்ளமும் குறைய தொடங்கியது. அதன் பின்னரே அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.
நல்லதங்காள் ஓடைக்கு நீர்வரத்து ஏற்பட்டு அப்பகுதிகளில் உள்ள குளங்கள், நீர்நிலைகளுக்கு செல்கிறது என்றாலும், காட்டாற்று வெள்ளம் ஏற்படும் போது அதிகப்படியான தண்ணீர் ஓடையில் செல்லும். இந்த தண்ணீர் அனைத்தும் அப்படியே வீணாக விளைநிலங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் பயிர்கள் தான் நாசமாகிறது. மாறாக மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அணை அமைத்தால் தண்ணீரை தேக்கி வைத்து பாசனத்துக்கு பயன்படுத்த முடியும்.
ஓடைக்கு செல்லும் வழித்தடத்தின் அருகில் மயானத்துக்கு செல்லும் பாதை உள்ளது. ஆனால் இந்த பாதை பயன்படுத்த முடியாமல் புதர்மண்டி இருப்பதால், ஓடையின் குறுக்காக சென்று வரப்பு பகுதியை அடைந்து அங்கிருந்து மயானத்துக்கு பிணங்களை கொண்டு சென்று அப்பகுதி மக்கள் இறுதிச்சடங்கு நடத்தி வந்தனர். தற்போது ஓடையில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் மக்களால் ஓடையை கடக்க முடியவில்லை. எனவே ஓடையின் குறுக்காக பாலம் அமைக்க வேண்டும். அல்லது மயானத்துக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story