47 ஆண்டுகளுக்கு பிறகு கோவிந்தபாடியில் மாரியம்மன் சிலை மீட்கப்பட்டு கோவிலில் ஒப்படைப்பு இருதரப்பினர் தகராறில் வருவாய்த்துறையினர் நடவடிக்கை
கொளத்தூர் அருகே கோவிந்தபாடியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, ஒரு தரப்பினரிடம் இருந்த மாரியம்மன் சிலையை 47 ஆண்டுகளுக்கு பிறகு வருவாய்த்துறையினர் மீட்டு, கோவிலில் ஒப்படைத்தனர்.
கொளத்தூர்,
கொளத்தூர் அருகே உள்ளது கோவிந்தபாடி கிராமம். இங்குள்ள மாரியம்மன் கோவிலுக்கு பூசாரி நியமிப்பது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை எழுந்தது. இது தொடர்பாக இருபிரிவினரும் தனித்தனியே சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஒரு தரப்பினர் இந்த மாரியம்மன் கோவிலில் திருவிழா நடத்த முயன்றனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மேட்டூர் வருவாய் துறையினர் கோவிலை பூட்டி சீல் வைத்தனர். பின் சில மாதங்களுக்கு பிறகு ஒரு தரப்பினர் கோவிலை திறக்க கோர்ட்டு உத்தரவு பெற்றனர். இதனால் வருவாய்த்துறையினர் கோவிலை திறந்து, இந்து சமய அறநிலைத் துறையை சேர்ந்த பூசாரியை நியமித்தனர்.
இதனிடையே ஒரு தரப்பினரிடம் மாரியம்மன் சிலை இருந்தது. சுமார் 47 ஆண்டுகளாக அந்த சிலை அவர்களிடம் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே மாரியம்மன் சிலையை மீட்டு கோவிலில் வைக்க வேண்டும் என மற்றொரு தரப்பினர் கோர்ட்டில் அனுமதி பெற்றனர். தொடர்ந்து கடந்த 5-ந் தேதி மேட்டூர் உதவி கலெக்டர் தலைமையிலான வருவாய்த்துறையினர் சிலையை மீட்க சென்றனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி 2 நாட்கள் கால அவகாசம் வழங்கினர்.
இதைத்தொடர்ந்து நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேட்டூர் உதவி கலெக்டர் லலிதா தலைமையில் வருவாய்த்துறையினர் அந்த சிலையை மீட்டு மாரியம்மன் கோவிலில் ஒப்படைத்தனர். சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சிலை மாரியம்மன் கோவிலில் வைக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் அங்கு வழிபாடு நடத்தினர்.
இந்த சம்பவத்தால் கோவிந்தபாடி கிராமத்தில் நேற்று காலை முதல் பதற்றம் நிலவியது. இதனால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story