இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ வேண்டும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு


இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ வேண்டும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 9 Dec 2018 4:15 AM IST (Updated: 9 Dec 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சேஷாயி கூறினார்.

தஞ்சாவூர்,

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் தொடர்பான மோட்டார் வாகன விபத்து தொடர்பான வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய மெகா லோக் அதாலத் முகாம் நேற்று தஞ்சையில் நடந்தது. தஞ்சை மாவட்ட நீதிபதி சிவஞானம் தலைமை தாங்கினார்.

இதில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சேஷாயி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன். அதே நேரத்தில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மை போன்றவர்கள் உதவி செய்ய வேண்டும். இயற்கை பேரிடர் ஏற்படுவதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் உதவி செய்ய முடியும்.

நாம் திரைப்படம் பார்க்க சென்றால் தியேட்டரில் உள்ள இருக்கைகளை பார்ப்பது இல்லை. திரைப்படத்தை தான் பார்ப்போம். அதை விட்டு இருக்கையை பார்த்துக்கொண்டு இருந்தால் திரைப்படம் முடிந்து விடும். திரைப்படம் சுவாரஸ்யமாக இருந்தால் இருக்கையில் மூட்டைபூச்சி கடித்தால் கூட நமக்கு தெரியாது. அது போல தான் அன்றை தினம் என்ன நடக்க போகிறது என்று நமக்கு தெரியாது. சிறிய, சிறிய விஷயங்களை நாம் விட்டுக்கொடுத்து போக வேண்டும். எதற்கு எடுத்தாலும் அதை பெரியதாக்கி கொள்ளக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் 202 வழக்குகளில் தீர்வு ஏற்பட்டதற்கான ரூ.5 கோடியே 80 ஆயிரத்து 102-க்கான காசோலைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இதில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள் பாலகிருஷ்ணன், பூர்ணஜெயஆனந்த், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சாந்தி, கூடுதல் சார்பு நீதிபதி சுந்தர்ராஜன், மாவட்ட உரிமையியல் நீதிபதி மனோகரன், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் அழகிரி, நளினகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story