பெரம்பலூர், அரியலூர் மாவட்ட நாட்டுப்புற நலவாரிய கலைஞர்கள் இசைக்கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம்


பெரம்பலூர், அரியலூர் மாவட்ட நாட்டுப்புற நலவாரிய கலைஞர்கள் இசைக்கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 9 Dec 2018 3:45 AM IST (Updated: 9 Dec 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர், அரியலூர் மாவட்ட நாட்டுப்புற நலவாரிய கலைஞர்கள் இலவச இசைக்கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூர்,

நாட்டுப்புற கலைஞர்கள் சமூக மேம்பாட்டிற்காக தமிழக அரசால் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நல வாரியத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் 226 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 318 பேரும் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். இந்த கலைஞர்களுக்கு சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் படி ஒரு மாவட்டத்திற்கு 10 கலைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு இலவசமாக இசைக்கருவிகள் மற்றும் ஆடை, ஆபரணங்கள் வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலவச இசைக் கருவிகள் மற்றும் ஆடை, ஆபரணங்களை பெறுவதற்கு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்திருக்க வேண்டும். தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ.10 கட்டணம் செலுத்தி புதுப்பித்திருக்க வேண்டும்.

ஏற்கனவே இந்த துறையின் வாயிலாக இலவச இசைக்கருவிகள் பெற்றிருத்தல் கூடாது. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த மேற்காணும் தகுதியுடைய கலைஞர்கள் தங்களுக்கு தேவையான இசைக்கருவிகள் ஆடை, ஆபரணங்கள் குறித்து விண்ணப்பத்தினை நலவாரிய புத்தக நகலுடன் பெரம்பலூரில் விளாமுத்தூர் ரோடு ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வருகிற 30-ந் தேதிக்குள் நேரிடையாகவோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பத்தை அளித்திட வேண்டும். 30-ந் தேதிக்கு பிறகு வரப்பெறும் விண்ணப்பங்கள் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. இந்த தகவல் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட கலெக்டர்அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story