மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருக்க கூடாது; திருமாவளவன் வேண்டுகோள்


மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருக்க கூடாது; திருமாவளவன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 10 Dec 2018 5:00 AM IST (Updated: 10 Dec 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருக்க கூடாது. என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.

புதுச்சேரி,

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள் (வயது 96). இவர் கடந்த மாதம் 22–ந் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவருக்கான கருமகாரியம் நேற்று காலை பூரணாங்குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுச்சேரியில் கவர்னரால் நியமிக்கப்பட்ட 3 நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லாது என்று ஏற்கனவே மாநில அரசு முடிவு எடுத்திருந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் இந்த நியமனம் செல்லும் என்று தீர்ப்பு அளித்துள்ளனர். அது மட்டுமல்லால் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் அளிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான ஒரு தீர்ப்பு.

நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் வாக்களிக்கும் உரிமை பெற்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை எண்ணிக்கை பலம் உள்ள ஒரு அரசை கூட எந்த நேரத்திலும் இவர்களை வைத்து கவிழ்த்து விட முடியும். இது ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் ஒன்றாக உள்ளது. இதனை எதிர்த்து புதுவை அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளது.

லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி நியமன எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் இல்லை. தற்போது அதற்கு மாறாக சுப்ரீம் கோர்ட்டு அதிகார வரம்பை மீறி தீர்ப்பு அளித்துள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இதில் மத்திய அரசு நேரடியாக தலையிட வேண்டும். யூனியன் பிரதேசத்தை மத்திய அரசின் சொத்து என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பு புதுச்சேரிக்கு மட்டுமல்ல அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும் நெருக்கடி தரக்கூடிய ஒன்று.

யூனியன் பிரதேசம் சுதந்திரமாக செயல்பட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு ஜனநாயகத்திற்கு எதிரான ஒன்று. எனவே இதனை எதிர்த்து மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட்(உறுதிச்சான்று) தாக்கல் செய்ய வேண்டும். யூனியன் பிரதேசம் மத்திய அரசின் சொத்து என்னும் சொல்லை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்களிக்கும் உரிமையையும் தடை செய்ய வேண்டும். அப்போது தான் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை, ஜனநாயகத்தை காக்க முடியும்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியின் திருவுருவ சிலை வருகிற 14–ந் தேதி திறக்கப்பட உள்ளது. விடுதலை சிறுத்தைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி கலந்து கொண்டு திறந்து வைக்க உள்ளார்.

தி.மு.க., காங்கிரஸ், மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமை கட்சிகள் இணைந்து ஒரு அணியாக தமிழகத்தில் வலுப்பெற்று வருகிறது. கருணாநிதியின் உருவ சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி கலந்து கொள்ளும் போது தமிழக அரசியல் மிகவும் தீவிரமாக சூடுபிடிக்க தொடங்கும். இந்த அணி மேலும் வலுப்பெறும். புதுச்சேரியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியினை பிரதமர் பார்வையிடவில்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலம் என்பதால் மத்திய அரசு புதுவையை மாற்றான் தாய் மனப்பான்மையோடு பார்ப்பதற்கும் கண்டனம் தெரிவிக்கிறேன்.

ஆணவப் படுகொலை சம்பவத்தால் கணவரை இழந்த நிலையிலும் கவுசல்யா மறுமணம் செய்து கொண்டது வரவேற்கதக்கது. உடுமலை சங்கரின் பெயரில் அறக்கட்டளை நிறுவியதன் மூலமாக சாதி ஒழிப்பு என்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு திட்ட அறிக்கை தயார் செய்யதான் அனுமதி அளித்துள்ளது என கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். திட்ட அறிக்கை தயார் செய்வது என்பதே அணை கட்டுவதற்கான அனுமதி தானே. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story