கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீஸ் அதிகாரிகள் ஆய்வு
புதுவையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது தொடர்பாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதையொட்டி புதுவையில் உள்ள பிரபலமான ஓட்டல்களில் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் கடற்கரை சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவார்கள்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை சீரமைப்பது தொடர்பாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு (போக்குவரத்து) ராகுல் அல்வால் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு வம்சிதர ரெட்டி, இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடற்கரை சாலையையொட்டி உள்ள வீதி, பழைய துறைமுக வளாகம், உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானம், உப்பளம் துறைமுக வளாகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.
இதில் எந்தெந்த பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த வேண்டும், எந்தெந்த சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை அமைக்க வேண்டும், அதேபோல் மாற்று வழிப்பாதை அமைத்தல் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசித்தனர்.