தக்கலை பஸ்நிலையத்தில் கல்லூரி மாணவியிடம் சில்மி‌ஷம்; போதை வாலிபர் கைது


தக்கலை பஸ்நிலையத்தில் கல்லூரி மாணவியிடம் சில்மி‌ஷம்;  போதை வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 Dec 2018 11:00 PM GMT (Updated: 10 Dec 2018 3:10 PM GMT)

தக்கலை பஸ்நிலையத்தில் மாணவியிடம் மதுபோதையில் சில்மி‌ஷம் செய்த வாலிபரை பயணிகள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பத்மநாபபுரம்,

தக்கலை பஸ்நிலையத்துக்கு எதிரே அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் குடிமகன்கள் மதுவை குடித்து விட்டு பஸ்நிலையத்துக்குள் நுழைந்து அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் பள்ளி– கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறும் சம்பவங்கள் நடப்பதாக புகார்கள் வந்தன.

இந்தநிலையில் நேற்று தக்கலை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி, குமாரகோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக தனது தாயாருடன் தக்கலை பஸ்நிலையத்துக்கு வந்தார். அவர்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

அப்போது, மதுக்கடையில் இருந்து போதையில் வெளியே வந்த வாலிபர், பஸ்நிலையத்துக்குள் புகுந்து மாணவியின் அருகில் சென்று நின்றார். திடீரென அந்த வாலிபர், மாணவியிடம் அத்துமீறி சில்மி‌ஷம் செய்தார். இதனால் மாணவியும், அவரது தாயாரும் அதிர்ச்சியில் அலறினார்கள்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு சக பயணிகளும், கடைக்காரர்களும் ஓடி வந்தனர். அதற்குள் அந்த போதை வாலிபர் தப்பியோட முயன்றார். அதற்குள் பயணிகள் அனைவரும் அந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர், இதுபற்றி தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரை பிடித்து தக்கலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் தக்கலை அருகே உள்ள மூவாற்றுமுகம் பகுதியை சேர்ந்த சேம்ராஜ்(வயது 35) என்பதும், நாகர்கோவில் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் சேம்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

 மேலும், போதை ஆசாமிகளால் பஸ்நிலையத்துக்குள் நிற்கும் பயணிகள் அவதிப்படுவதால் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story