கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரெயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரெயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Dec 2018 4:30 AM IST (Updated: 12 Dec 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஜங்ஷன் ரெயில்வே கோட்ட அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருச்சி,

ரெயில் நிலைய அளவில் மாற்றுத்திறனாளி நலகமிட்டி அமைக்க வேண்டும். வீல் சேர் வசதி, தடையில்லா பிளாட்பார வசதி செய்து கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி வண்டிகளுக்கு இலவச பார்க்கிங் வசதி, இலவச கழிப்பிட வசதி, ஓய்வெடுக்கும் வசதி செய்து கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பெட்டிகளில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே ஊழியர்களும் ஏறி ஆக்கிரமித்து கொள்வதை தடுத்திட வேண்டும். மாற்றுத்திறனாளி பெட்டி பற்றிய அறிவிப்பு வெளியிட வேண்டும்.

திருச்சி ரெயில் நிலையத்தில் இயங்கும் பேட்டரி காரில் செல்வதற்கு ரூ.30 கட்டணம் வசூலிப்பதை கைவிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம் என அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் ஜீவா தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் புஷ்பநாதன், திருச்சி புறநகர் தலைவர் குமார், செயலாளர் ரவி, பொருளாளர் சுப்பிரமணி, மாநகர் செயலாளர் கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபால் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 3 சக்கர ஸ்கூட்டர், ஊன்றுகோல், 3 சக்கர சைக்கிள் ஆகியவற்றுடன் பங்கேற்றனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் மாநில தலைவர் ஜான்சிராணி, பொதுச்செயலாளர் நம்புராஜன் ஆகியோர் கையெழுத்திட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளரிடம் வழங்கினர். 

Next Story