பா.ஜ.க.வுக்கு பின்னடைவு: மாற்றத்தை விரும்புவதற்கான கண்ணோட்டம் கரூரில் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி


பா.ஜ.க.வுக்கு பின்னடைவு: மாற்றத்தை விரும்புவதற்கான கண்ணோட்டம் கரூரில் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
x
தினத்தந்தி 12 Dec 2018 4:30 AM IST (Updated: 12 Dec 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

சத்தீஷ்கார் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. பின்னடைவுக்கு மக்கள் மாற்றத்தை விரும்புவதற்கான கண்ணோட்டம் என கரூரில் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

கரூர்,

கரூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர் அதன் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், பட்டியலின பிரிவில் உள்ள பள்ளர், குடும்பர் உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என மாற்றி அரசாணை வெளியிட வேண்டும். மேலும் எங்களை பட்டியலினத்திருந்து வெளியேற்றி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும்.

எங்களது மக்களின் குலதொழில் வேளாண்தொழில் ஆகும்.

எனவே சாதி மோதல் உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையிலான எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய-மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுவை பெற்று கொண்ட கலெக்டர் அன்பழகன் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.

அதனை தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்:-

ராஜஸ்தான், சத்தீஷ்கார் உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்புவதற்கான கண்ணோட்டத்தில் தான் இதனை பார்க்க வேண்டும். ஆனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் இதனை எதிர்பார்க்க முடியாது.

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தியது போன்ற நடவடிக்கைகளால் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை. இதனால் சாதாரண மக்களும் பயனடைகின்றனர். மீன்பிடிப்போரை மீனவர் என்றும், நெசவுதொழில் செய்வோரை நெசவாளர் என்றும் அழைக்கிற போது காலங்காலமாக வேளாண் தொழில் செய்து வரும் பள்ளர், குடும்பர் பிரிவினை தேவேந்திரகுல வேளாளர் என அறிவிப்பு செய்வதில் எந்தவித தவறும் இல்லை. இதனை அந்த பிரிவு இளையசமுதாயத்தினர் பெரிதும் விரும்புகின்றனர் என்று தெரிவித்தார்.


Next Story