அடிப்படை வசதிகள் கேட்டு கிராமமக்கள் மனு


அடிப்படை வசதிகள் கேட்டு கிராமமக்கள் மனு
x
தினத்தந்தி 11 Dec 2018 10:30 PM GMT (Updated: 11 Dec 2018 8:05 PM GMT)

பொதுமக்கள் குளித்தலை காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக வந்து, கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

குளித்தலை,

குளித்தலை ஊராட்சி ஒன்றியம், ராஜேந்திரம் ஊராட்சிக்குட்பட்ட வாளாந்தூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குளித்தலை காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக வந்து, கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது-

ராஜேந்திரம் ஊராட்சிக்குட்பட்ட வாளாந்தூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் ராஜேந்திரம் ஊராட்சியை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா தத்தெடுத்துள்ளார். தத்தெடுத்து 4½ ஆண்டுகளுக்கு மேலாகியும், எந்த அடிப்படை வசதிகளையும் இதுவரை செய்துதரப்படவில்லை. வாளாந்தூரில் யாரேனும் இறந்து போனால் புதைப்பதற்கும், எரிப்பதற்கும் சுடுகாடு இருந்தும், அதில் அடிப்படை வசதிகள் இல்லாததால், 5 கிலோமீட்டர் சுற்றிவந்து குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட சுடுகாட்டில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யவேண்டியுள்ளது. மேலும் வாளாந்தூர் பகுதியில் பகுதிநேர நூலகம் அமைக்க மாவட்ட நூலக துறைக்கு முறைப்படி மனு கொடுத்தும், அதற்கான தளவாடப்பொருட்கள் வாங்கி கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் சமுதாய கூடம், நாடகமேடை, ஆண்-பெண் இருவருக்குமான பொது கழிப்பிடம், 5-ம் வகுப்பு வரையுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு விளையாட்டு திடல் போன்ற தேவைகளையும் பூர்த்தி செய்யவேண்டும். வாளாந்தூரில் இருந்து குளித்தலை நகரப்பகுதிக்கு செல்ல ரெயில்போகும் வழித்தடத்தில் குகை வழிப்பாதை (சுரங்கப்பாதை) அமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். 

Next Story