மோட்டார் சைக்கிள் மீது காரை மோதி தி.மு.க.வினர் 2 பேரை கொல்ல முயற்சி அ.தி.மு.க.வை சேர்ந்தவர் கைது


மோட்டார் சைக்கிள் மீது காரை மோதி தி.மு.க.வினர் 2 பேரை கொல்ல முயற்சி அ.தி.மு.க.வை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 11 Dec 2018 10:15 PM GMT (Updated: 11 Dec 2018 8:17 PM GMT)

குத்தாலம் அருகே முன்விரோதத்தில் மோட்டார் சைக்கிள் மீது காரை விட்டு மோதி தி.மு.க.வினர் 2 பேரை கொலை செய்ய முயன்றதாக அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

குத்தாலம்,

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே திருமணஞ்சேரி காளி வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ்(வயது 37). இவர், டீக்கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் திருலோகசந்தர்(37). உறவினர்களான இவர்கள் இருவரும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.

திருமணஞ்சேரி கீழத்தெருவை சேர்ந்தவர் சங்கர்(38). அதே பகுதியை சேர்ந்த தங்கவேலு மகன் ராமமூர்த்தி. உறவினர்களான இவர்கள் இருவரும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள். பாக்கியராஜ் தரப்பினருக்கும், சங்கர் தரப்பினருக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது ராமமூர்த்தியை தாக்கிய வழக்கில் பாக்கியராஜ் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் ஜாமீனில் வெளியே வந்த பாக்கியராஜ், குத்தாலத்தில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துவிட்டு தனது உறவினர் திருலோகசந்தருடன் மோட்டார் சைக்கிளில் திருமணஞ்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். கண்டியூர் மெயின்ரோட்டில் சென்றபோது, சங்கரும், ராமமூர்த்தியும் ஒரு காரில் வந்தனர். அவர்கள், தாங்கள் வந்த காரை மோட்டார் சைக்கிள் மீது விட்டு மோதி பாக்கியராஜை கொலை செய்ய முயற்சித்தனர். அத்துடன் அவர்கள், கொலை மிரட்டலும் விடுத்து சென்றதாக தெரிகிறது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாக்கியராஜ், திருலோகசந்தர் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாக்கியராஜ் கொடுத்த புகாரின் பேரில் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தார். தலைமறைவாக உள்ள ராமமூர்த்தியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story