ராஜபாளையத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்; புகார் தெரிவித்தும் அதிகாரிகள் அலட்சியம்


ராஜபாளையத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்; புகார் தெரிவித்தும் அதிகாரிகள் அலட்சியம்
x
தினத்தந்தி 11 Dec 2018 10:30 PM GMT (Updated: 11 Dec 2018 8:18 PM GMT)

ராஜபாளையத்தில் குழாய் உடைப்பு காரணமாக ஒரு மாதமாக குடிநீர் சாலையில் வீணாக ஓடுகிறது. இது குறித்து நகராட்சிக்கு பல முறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் மாடசாமி கோவில் ரோட்டில் குடிநீர் மேல்நிலை தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து பளையபாளையம் பகுதி மக்களுக்கு குழாய் மூலம் வாரம் ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாடசாமி கோவில் ரோட்டில் உள்ள தெருக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் போது தொட்டியில் இருந்து 100 அடி து£ரத்தில் குழாய் உடைத்து தண்ணீர் வீணாக வெளியேறி ரோட்டில் ஆறாக ஓடுகிறது. இவ்வாறு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது.

இது குறித்து இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இது வரை குழாய் உடைப்பை சீர் செய்ய நகராட்சி நிர்வாகம் முன் வர வில்லை.

கடந்த ஒரு மாதமாக பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் ஓடி சகதிக்காடாக மாறி உள்ளது. எனவே தண்ணீரின் முக்கியத்துவம் கருதி இனியாவது நகரசபை நிர்வாகம் விழித்துக் கொண்டு குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாகி வருவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நகராட்சி விழிப்புணர்வு பேரணி நடத்தி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர்.


Next Story