மேகதாது அணைகட்ட மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்துசெய்ய தீர்மானம்; சிவா எம்.எல்.ஏ. கோரிக்கை


மேகதாது அணைகட்ட மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்துசெய்ய தீர்மானம்; சிவா எம்.எல்.ஏ. கோரிக்கை
x
தினத்தந்தி 11 Dec 2018 11:15 PM GMT (Updated: 11 Dec 2018 9:15 PM GMT)

மேகதாது அணை கட்ட மத்திய அரசு வழங்கிய அனுமதியை ரத்துசெய்யக்கோரி புதுவை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி,

புதுவை தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. சபாநாயகரிடம் கொடுத்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

கர்நாடக மாநில அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி அணை கட்டப்படுமானால் தமிழகம், புதுச்சேரிக்கு வரும் காவிரி நீர் முற்றிலுமாக தடைபடும்.

காவிரி நீரை நம்பியுள்ள தமிழகத்தின் டெல்டா மாவட்ட மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் கடைமடை பகுதி விவசாய நிலங்கள் வறண்டு பாலைவனமாக மாறும். காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படி காவிரி நீரை உரிய பங்கீட்டின்படி வழங்குவதில்லை.

அப்படிய காவிரி நீரை வழங்கினாலும் தமிழக அரசு காரைக்கால் மாவட்டத்துக்கு உரிய பங்கீட்டை வழங்குவதில்லை. இதனால் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் பல ஆண்டாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் காவிரியின் குறுக்கே புதியதாக ஒரு அணை கட்ட நினைப்பது காரைக்கால் மாவட்டத்தை முற்றிலுமாக பாலைவனமாக மாற்றிவிடும்.

அணை கட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்கு முன்பாக மத்திய அரசு காவிரி நீரால் பயன்பெறும் மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டிருக்கவேண்டும். எதேச்சதிகார போக்குடன் செயல்படக்கூடிய மத்திய பாரதீய ஜனதா அரசு இவ்வி‌ஷயத்திலும் மாநில அரசுகளின் கருத்துகளை கேட்கவில்லை. இது கடும் கண்டனத்திற்குரியது.

புதுவை மாநில மக்களின் ஜீவாதாரத்தை விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாய சூழலில் நாம் தள்ளப்பட்டுள்ளோம். இதை உணர்ந்து தமிழக சட்டமன்ற கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். இதேபோல புதுச்சேரி சட்டமன்றத்திலும் காவிரியின் குறுக்கே இனி எந்த அணையும் கட்ட அனுமதிக்கக்கூடாது என கர்நாடக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story