வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் சிக்கியது விளக்கம் அளிக்க நோட்டீஸ்


வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் சிக்கியது விளக்கம் அளிக்க நோட்டீஸ்
x
தினத்தந்தி 14 Dec 2018 11:00 PM GMT (Updated: 14 Dec 2018 6:30 PM GMT)

வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.70 ஆயிரத்து 600 சிக்கியது. இது குறித்து விளக்கம் அளிக்க சார் பதிவாளருக்கு நோட்டீஸ் வழங்கினர்.

அம்பத்தூர்,

சென்னை கொரட்டூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு 2-வது பிரதான சாலையில் வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வில்லிவாக்கம், அம்பத்தூர், கள்ளிக்குப்பம், மதானம்பேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் சொத்து ஆவணங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இங்கு வில்லங்க சான்று, ஆவணங்கள் பதிவுசெய்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் ஊழியர்கள் லஞ்சம்கேட்டு பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு லவக்குமார் தலைமையில 6 பேர் கொண்ட குழுவினர் வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

வெளிப்புற கதவுகளை பூட்டி, உள்ளே இருந்தவர்களிடம் இருந்த செல்போன்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். சார்பதிவாளர், ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

பின்னர் சார்பதிவாளர் மேஜை, வில்லங்க சான்று வழங்கப்படும் அறை மற்றும் ஊழியர்கள் மேஜை என ஒவ்வொரு இடமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பணியில் இருந்த சார்பதிவாளர் கோபாலகிருஷ்ணன், இந்த ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை ஒரு அறையில் பூட்டி வைத்து விட்டு சோதனையை தொடர்ந்தனர்.

நேற்று முன்தினம் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுக்கான பதிவு கட்டணம் மற்றும் வில்லங்க சான்று உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை சரி பார்த்தபோது ரூ.70 ஆயிரத்து 600 மட்டும் கணக்கில் வராமல் கூடுதலாக இருந்தது. கணக்கில் காட்டப்படாத அந்த பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத பணத்துக்கு உரிய விளக்கம் அளிக்குமாறும், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்காத காரணத்தால் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் சார் பதிவாளர் கோபாலகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை, அதிகாலை 2.30 மணிக்கு முடிவடைந்தது. அதன்பிறகே சார்பதிவாளர் உள்பட அனைத்து ஊழியர்களும் வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சோதனை குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு லவக்குமார் கூறியதாவது:- வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச பணம் அதிகம் புரளுவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதில் ரூ.70 ஆயிரத்து 600 கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த பணத்துக்கு எவ்வித கணக்கும் காட்டப்படவில்லை. இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. அலுவலகத்தில் நடந்த சோதனைக்கு சார்பதிவாளர் ஒத்துழைப்பு தரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story