பொது வேலை நிறுத்தம் எதிரொலி: கோழிக்கோடு மாவட்டத்தில் பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை
பொது வேலை நிறுத்தம் எதிரொலியாக கோழிக்கோடு மாவட்டத்தில் பஸ், ஆட்டோக்கள் ஓடாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
கோழிக்கோடு,
கேரள மாநில அரசை கண்டித்து திருவனந்தபுரத்தில் பாரதீய ஜனதா சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தின் போது முட்டடை பகுதியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர் வேணுகோபாலன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையொட்டி கேரள மாநிலத்தில் பொதுவேலை நிறுத்தத்துக்கு பாரதீய ஜனதா கட்சியினர் அழைப்பு விடுத்து இருந்தனர்.
இதையொட்டி நேற்று கோழிக்கோடு மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ், ஆட்டோ, வாடகை கார்கள் ஓடவில்லை. மேலும் ஓட்டல்களும் மூடப்பட்டு இருந்தன. இதனால் சபரிமலைக்கு வந்த பக்தர்கள் சாப்பாடு கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
மேலும் பஸ், ஆட்டோக்கள் ஓடாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதேபோன்று கண்ணனூர், கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு, மலப்புரம் மாவட்டங்களிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்த மாவட்டங்களிலும் பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.