கோபியில் வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேர் கைது


கோபியில் வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 Dec 2018 11:18 PM GMT (Updated: 14 Dec 2018 11:18 PM GMT)

கோபியில் வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடத்தூர்,

கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26). பனியன் கம்பெனி தொழிலாளி. கடந்த மாதம் 30-ந் தேதி வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தார். மொடச்சூர் கலராமணி என்ற இடத்தில் அவர் சென்றபோது 4 மர்ம ஆசாமிகள் அவரை வழிமறித்து, உருட்டுக் கட்டையால் தாக்கி அவரிடம் இருந்த பணத்தை பறித்தனர்.

இதேபோல் கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (34). கோபி அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வெள்ளியங்கிரி வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கள்ளிப்பட்டி பாலம் அருகில் சென்றபோது 4 மர்ம ஆசாமிகள் அவரை வழிமறித்து மிரட்டி, பணம் பறித்தனர். இருவரிடமும் எவ்வளவு பணம் பறிக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.

இதைத்தொடர்ந்து கார்த்திக், வெள்ளியங்கிரி இருவரும் பணம் பறிகொடுத்தது பற்றி கோபி போலீசில் புகார் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் தனிப்படை போலீசார் கோபி மார்க்கெட் பகுதியில் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் சுற்றிய 3 பேரை பிடித்து விசாரித்தார்கள். அவர்கள் முன்னுக்கு பின் பதில் அளித்தார்கள். அதனால் அவர்களை கோபி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் கோபி கூகலூர் குளத்துக்கடையைச் சேர்ந்த சமையல் தொழிலாளி சுபான்பாட்ஷா (22), முத்துஷா வீதியைச் சேர்ந்த மில் தொழிலாளி தினேஷ் (20), புதுச்சாமி கோவில் வீதியைச் சேர்ந்த பெயிண்டர் ஷாஜிஅலி (36) என தெரிய வந்தது. மேலும் இவர்கள்தான் கார்த்திக், வெள்ளியங்கிரி இருவரிடமும் பணம் பறித்தது என்றும் விசாரணையில் தெரிந்தது. இதைத்தொடர்ந்து இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த ஒரு மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தார்கள்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் வழிப்பறியில் ஈடுபட கோபியைச் சேர்ந்த சரவணன் என்கிற செம்பட்டை என்பவர் மூளையாக செயல்பட்டு உள்ளார். அவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story