பசுமைப் பட்டாசு என்ற காரணத்தை கூறி பட்டாசு ஆலைகள் மூடப்படுவதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்


பசுமைப் பட்டாசு என்ற காரணத்தை கூறி பட்டாசு ஆலைகள் மூடப்படுவதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 Dec 2018 12:00 AM GMT (Updated: 14 Dec 2018 11:48 PM GMT)

பசுமை பட்டாசு என்ற காரணத்தைக் கூறி 10 லட்சம் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் பட்டாசு ஆலைகளை மூடும் நடவடிக்கைகளை மத்திய அரசு தவிர்க்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தினார்.

விருதுநகர்,

பட்டாசு ஆலைகள் கடந்த 1 மாத காலமாக மூடப்பட்டுள்ளன. இதனால் 10 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மாசு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. பசுமை பட்டாசு என்பது பற்றி எந்த வித விளக்கமும் தரப்படவில்லை. மத்திய அரசு வல்லுனர்களை கொண்டு பசுமை பட்டாசு பற்றிய விரிவான அறிக்கையை தயார் செய்ய வேண்டும். இது பற்றிய வழக்கு ஜனவரி 22–ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அப்படியானால் மேலும் 1½ மாத காலத்திற்கு ஆலைகளை திறக்க முடியாது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும்.

பட்டாசு வெடிப்பதால் மட்டும் மாசு ஏற்படுகிறது என்பதை ஏற்க முடியாது. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களாலும் மாசு ஏற்படுகிறது. பசுமை பட்டாசு என கூறி பட்டாசு ஆலைகளை மூடும் நடவடிக்கையை மத்திய அரசு தவிர்க்க வேண்டும். தமிழக அரசும் பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனவரியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் தேசம் காப்போம் மாநாட்டில் ராகுல் காந்தி கலந்துகொள்வார். தி.மு.க. தலைவர் ஸ்டாலின், இடது சாரிகள் கட்சி தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி, தமிழக கட்சித்தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலை விடுதலை சிறுத்தைகள் கட்சி அகில இந்திய அளவில் பார்க்கிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறும் என முதல் அமைச்சர் சொல்வது அவரது சொந்தக்கருத்து. செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைந்துள்ளது வரவேற்கத்தக்கது.

கஜா புயல் பாதிப்பை பிரதமர் மோடி பார்வையிட வராதது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வடக்கே உள்ளவர்கள் வாழ வேண்டும் தெற்கே உள்ளவர்கள் சாக வேண்டும் என்ற மத்திய அரசின் மனப்பான்மை மாற வேண்டும் என்று கூறியுள்ளது நியாயம் தான்.

விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் பணியாற்றிய 48 ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமலும், பணி செய்ய விடாமலும் மாவட்ட நிர்வாகமும் அதிகாரிகளும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரிடமும், செயலாளரிடமும் இதுபற்றி முறையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.


Next Story