இடிக்கப்பட்ட கடைக்கான இழப்பீட்டு தொகையை முழுவதும் வழங்காததால் கோதண்டராம சாமி சிலையை கொண்டு சென்ற லாரியை பொதுமக்கள் முற்றுகை


இடிக்கப்பட்ட கடைக்கான இழப்பீட்டு தொகையை முழுவதும் வழங்காததால் கோதண்டராம சாமி சிலையை கொண்டு சென்ற லாரியை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 15 Dec 2018 11:15 PM GMT (Updated: 15 Dec 2018 11:11 PM GMT)

திண்டிவனம் அருகே இடிக்கப்பட்ட கடைக்கு இழப்பீட்டு தொகையை முழுவதுமாக வழங்காததால், கோதண்டராம சாமி சிலையை கொண்டு சென்ற லாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டிவனம்,

பெங்களுரு ஈஜிபுரம் பகுதியில் கோதண்டராம சுவாமி தேவஸ்தான அறக்கட்டளைக்கு சொந்தமான கோதண்டராமசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்ய திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அகரகொரக்கோட்டை கிராமத்தில் ஒரே கல்லில் பெரிய அளவில் விஸ்வரூப கோதண்டராம சாமி சிலை மற்றும் 7 தலை கொண்ட ஆதிசே‌ஷன்பாம்பு சிலை ஆகியவை பீடத்துடன் சேர்த்து 108 அடி உயரம் கொண்டதாக பிரமாண்ட சிலையாக தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த சிலை 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் ஏற்றப்பட்டு பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அதன்படி அகரகொரக்கோட்டையில் இருந்து ஒரு வாரத்திற்கு முன்பு புறப்பட்ட லாரி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடு பேட்டை, தீவனூர், செஞ்சி வழியாக பெங்களூருவுக்கு செல்ல இருக்கிறது.

நேற்று முன்தினம் இந்த லாரி வெள்ளிமேடுபேட்டையை அடுத்த வடசிறுவலூர் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நேற்று காலை 10.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட லாரி தீவனூரை சென்றடைந்தது. அங்கு திண்டிவனம்–கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள புறவழிச்சாலையில் லாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் லாரி, மாநில நெடுஞ்சாலைகளின் வழியாக எடுத்து செல்லப்பட்டு வந்தது. தற்போது தேசிய நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சாலையில் செல்ல இருக்கிறது. ஆகையால் இதற்கு உரிய அனுமதியை பெற வேண்டும் என்று கூறப்படுகிறது. எனவே இதற்கான அனுமதியை பெறும் முயற்சியில் சிலையை கொண்டு செல்லும் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அனுமதி கிடைத்தவுடன் அங்கிருந்து அந்த லாரி புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே வெள்ளிமேடு பேட்டையை லாரி கடந்து வருவதற்காக, சாலையோரம் இடையூறாக இருந்த கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டது. இதற்கு உரிய இழப்பீட்டு தொகையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு சிலையை கொண்டு செல்லும் குழுவினர் வழங்கினார்கள். அந்த வகையில் வெள்ளிமேடுபேட்டையை சேர்ந்த குபேரன் என்பவரது கடையும் இடிக்கப்பட்டது. அதில் அவருக்கு இழப்பீடாக 13½ லட்சம் ரூபாய் வழங்குவதாக தெரிவித்தனர்.

ஆனால் குபேரனுக்கு இதுவரையில் மொத்தம் 4 லட்சம் ரூபாய் தான் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் பிரமாண்ட சாமி சிலையுடன் லாரி நிற்கும் இடத்திற்கு சென்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த வெள்ளிமேடு பேட்டை போலீசார், மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், சிலையை கொண்டு செல்லும் குழுவினர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பணம் முழுவதையும் தந்த பிறகே லாரியை அங்கிருந்து எடுத்து செல்ல வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து இது குறித்த பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் முடிவில் ரூ.6½ லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் கொடுக்கப்பட வேண்டிய 3 லட்சமும் உடனடியாக தரப்படும் என்று குபேரனிடம் தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம், இழப்பீட்டு தொகை வழங்கும் பிரச்சினை முடிவுக்கு வந்தாலும், தேசிய நெடுஞ்சாலையில் லாரி செல்வதற்கான உரிய சான்றிதழ் கிடைத்தப்பின்னரே தீவனூரில் இருந்து லாரிபுறப்பட்டு செல்லும். இதற்கான முயற்சியில் சிலையை கொண்டு செல்லும் குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுமக்களின் முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story