பிளஸ்-2 தேர்வுக்கான பாடத்திட்டங்களை குறைக்க அரசு பரிசீலனை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


பிளஸ்-2 தேர்வுக்கான பாடத்திட்டங்களை குறைக்க அரசு பரிசீலனை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 15 Dec 2018 11:40 PM GMT (Updated: 15 Dec 2018 11:40 PM GMT)

வரும் கல்வி ஆண்டு முதல் பிளஸ்-2 தேர்வுக்கான பாடத்திட்டங்களை குறைக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது என கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கடத்தூர்,

கோபியில் உள்ள ஒரு சேவை சங்கத்தின் நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பாக செயல்பட்டு பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகிறது. மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பாடங்கள் பாதியாக குறைக்கப்படும் என கூறியுள்ளார். அவர் கூறியது சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும். ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு முறையில் பாடங்களை உருவாக்குகின்றன. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் கொண்டு வந்து உள்ள பாடத்திட்டம் இந்தியாவே வியக்கும் அளவுக்கு உள்ளது. இதனால் கல்லூரிகளுக்கு மாணவ- மாணவிகள் சென்றால் கூட அந்த பாடங்களை எளிமையாக கற்க முடியும்.

பிளஸ்-2 தேர்வை பொறுத்தவரையில் மாணவ- மாணவிகளுக்கு பாடத்திட்டங்கள் கூடுதல் சுமையாக உள்ளதாகவும், தேர்வுக்கு நாட்கள் குறைவாக உள்ளதாகவும் கோரிக்கைகள் வந்து உள்ளன. எனவே வரும் கல்வியாண்டு முதல் பாடத்திட்டங்களை குறைக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. இன்று (அதாவது நேற்று) மத்திய அரசின் தேசிய திறனாய்வு தகுதி தேர்வுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

மேலும் மாணவ- மாணவிகளுக்கு நீச்சல் மற்றும் கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். மொபட், மோட்டார்சைக்கிளில் மாணவ- மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு வருவதை தடுக்க அவர்களுக்கு ஆசிரியர்களை கொண்டு அறிவுரை வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.


Next Story