முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 18 Dec 2018 4:00 AM IST (Updated: 17 Dec 2018 9:17 PM IST)
t-max-icont-min-icon

முறையாக குடிநீர் வழங்கக்கோரி நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பனப்பாக்கம்,

பனப்பாக்கத்தை அடுத்த காட்டுப்பாக்கம் ஊராட்சியில் அம்பேத்கர் காலனி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் காட்டுப்பாக்கம் ஊராட்சி செயலாளரிடமும், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பலமுறை புகார் அளித்துள்ளனர்.

ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகளின் மெத்தனத்தை கண்டித்தும் முறையாக குடிநீர் வழங்கக்கோரியும் அம்பேத்கர் காலனியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் அங்கு இல்லை. அவர் நெமிலி ஊராட்சி ஒன்றிய பகுதி கிராமங்களில் நடைபெறும் திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காக அலுவலர்களுடன் சென்றிருந்தார். இதனால்ஆத்திரமடைந்த பொதுமக்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன் அமர்ந்து, முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, குமார் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், “எங்கள் பகுதியில் குடிநீருக்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து கிடைக்கும் நீரை தான் அனைவரும் பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால் சிலர் மின்மோட்டாரை வைத்து தண்ணீரை உறிஞ்சுவதால், எங்களுக்கு முறையாக குடிநீர் கிடைப்பதில்லை. எனவே மின்மோட்டாரை வைத்து குடிநீர் எடுப்பவர்களின் மின்மோட்டாரை அகற்ற வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் அனைவரும் பயன்படுத்தும் விதமாக பொதுகுழாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story