உதவி கலெக்டர் அலுவலகங்கள் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உதவி கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி,
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 10-ந் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர்கள் கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கணினி மற்றும் இணைய வசதி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 8-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு மற்றும் செங்கம் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணைச் செயலாளர் விஜியகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏங்கல்ஸ்பிரபு முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை வட்ட மகளிரணி செயலாளர் ரூபா வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஏழுமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கை வலியுறுத்தி பேசினார். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஆரணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் தாலுகா அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் வெங்கடரமணன் தலைமை தாங்கினார். வட்டக் கிளை தலைவர் கோபால் முன்னிலை வகித்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன் சென்றடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட ஆரணி, போளூர், ஜமுனாமரத்தூர், கலசபாக்கம் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த 98 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story