கடன் தொல்லையால் விபரீதம், ஏலக்காய் விவசாயி தற்கொலை - 2 பேர் கைது
போடி அருகே, கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
போடி,
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ராசிங்கபுரம் கரியப்பகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 38). இவர், கேரள மாநிலம் பேத்தொட்டி என்ற இடத்தில் ஏலக்காய் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த மதியழகன் (52), மூக்கையா (42) ஆகியோரிடம் தலா ரூ.1½ லட்சம் வீதம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார்.
ஆனால் அந்த கடன் தொகையை திருப்ப செலுத்த முடியவில்லை. இதனால் அவர்கள் சதீஷ்குமாரின் வீட்டுக்கு வந்து கடனை திருப்பி தருமாறு திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சதீஷ்குமாருக்கும், அவருடைய மனைவி முருகேஷ்வரிக்கும் (30) இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் முருகேஷ்வரி கோபித்துக் கொண்டு பேரையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள், பணத்தை திருப்பி கொடுக்காவிட்டால் ஏலக்காய் தோட்ட குத்தகையை தங்களுக்கு எழுதி வைக்கும்படி கேட்டு தகராறு செய்தனர். இதனால் மனம் உடைந்த சதீஷ்குமார், நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தநிலையில் நேற்று காலையில் நீண்டநேரமாகியும் அவருடைய வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அவருடைய தந்தை முருகனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் அங்கு வந்து கதவை தட்டினார். இருப்பினும் அவர் திறக்கவில்லை.
இதனையடுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு சதீஷ்குமார் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் அவருடைய வீட்டில் இருந்து சதீஷ்குமார் எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில், மதியழகன், மூக்கையா ஆகியோரிடம் நான் கடன் வாங்கி இருந்தேன். பணத்தை திரும்ப கேட்டு அவர்கள் எனக்கு நெருக்கடி கொடுத்தனர். வீட்டுக்கு வந்து அவர்கள் பணத்தை கேட்டு என்னை திட்டி அவமானப்படுத்தினர். பணத்தை கொடு அல்லது ஏலக்காய் தோட்டத்தை எழுதி கொடு என்று கேட்டனர்.
இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளானேன். இதனால், உலகத்தில் இருப்பதை விட சாவதே மேல் என்று முடிவு செய்து உலகத்தை விட்டே போகிறேன். என்னுடைய சாவுக்கு இவர்கள் 2 பேரும் தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தை அடிப்படையாக கொண்டு, சதீஷ்குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து மதியழகன், மூக்கையா ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story