இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 36 இடங்களில் உண்ணாவிரதம் விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 36 இடங்களில் உண்ணாவிரதம் விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 19 Dec 2018 4:15 AM IST (Updated: 19 Dec 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி நாகை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 36 இடங்களில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

கஜா புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகை ரூ.15 ஆயிரம் கோடியை உடனே வழங்க வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட நெற் பயிர் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் அரசு புதிதாக வழங்க வேண்டும்.

மகளிர் சுய உதவிக்குழு கடனை ரத்து செய்ய வேண்டும். நிவாரணம் கேட்டு போராடிய பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபடுவது என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நாகையை அடுத்த ஐவநல்லூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாநில குழு உறுப்பினர் சரபோஜி, முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

இதே போல பாலையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சாபில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

கீழையூர் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. திருப்பூண்டி, சிந்தாமணி, பெரியதும்பூர், வேட்டைகாரனிருப்பு, வாழக்கரை, எட்டுக்குடி, திருவாய்மூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திட்டச்சேரி நடுக்கடை மெயின் ரோட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு கிளை செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் பாபுஜி, விவசாய தொழிற் சங்க மாவட்ட குழு உறுப்பினர் சிவசாமி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளர் பழனியப்பன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் சிவகுரு.பாண்டியன், தேசிய நிர்வாக குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பழனிச்சாமி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் சம்பந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தாணிக்கோட்டகத்தில் கிளை செயலாளர் பன்னீர் செல்வமும், மருதூரில் கிளை செயலாளர் முருகன், பஞ்சநதிக்குளம் கிழக்கில் கிளை செயலாளர் ராமசந்திரன், மணக்குடியில் நிர்வாக குழு உறுப்பினர் செல்வராசு, ஓடாச்சேரியில் மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராமன்ஆகியோர் தலைமையிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

திருமருகல் அருகே கட்டுமாவடி ஊராட்சியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு கிளை செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்டகுழு உறுப்பினர் சிவசாமி முன்னிலை வகித்தார்.

சீயாத்தமங்கை ஊராட்சியில் கிளை செயலாளர் பாலச்சந்திரன், நெய்க்குப்பை ஊராட்சியில் கிளை செயலாளர் மாதவன், எரவாஞ்சேரி ஊராட்சியில் கிளை செயலாளர் வீரகுமார் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் திரளான இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்டத்தில் மொத்தம் 36 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Next Story