மேகதாது அணை பிரச்சினை: மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது துரைமுருகன் குற்றச்சாட்டு


மேகதாது அணை பிரச்சினை: மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது துரைமுருகன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 Dec 2018 4:30 AM IST (Updated: 19 Dec 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

மேகதாது அணை பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது என்று துரைமுருகன் குற்றம்சாட்டினார்.

நாகர்கோவில்,

அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில் அவர் பதவியில் நீடிக்கலாமா? என்று கேட்கிறீர்கள். குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ.யால் சம்மன் அனுப்பப்பட்டு, சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அ.தி.மு.க. அமைச்சர்களை 7 முறை அலைய வைத்து 7 முதல் 8 மணி நேரம் வரை துருவி, துருவி கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிற நிலையில் அமைச்சர்கள் அந்த பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது என்பது நாகரீகம் அல்ல.

அப்படி ஒட்டிக்கொண்டிருக்கிறவர்களை அப்படியே விட்டுவிடுவது ஒரு முதல்-அமைச்சருக்கு அழகல்ல. தன்னுடைய அமைச்சரவை தூய்மையானது என்று காட்டுவதற்காகவாவது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இப்படிப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இப்போதாவது மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதே என்று மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் எங்காவது ஒரு இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவது வரவேற்கத்தக்க ஒன்று.

தமிழகத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசு நிவாரண நிதி கொடுப்பது அப்புறமிருக்கட்டும். பிரதமர் மோடி கேரளாவில் வெள்ளச்சேதம் ஏற்பட்டபோது அங்கு சுற்றிப்பார்த்து, பணம் கொடுத்தார். அவருக்கு இருக்கிற வேலைகளில் அவர் இங்கு வரக்கூட வேண்டாம். ஏன் என்றால் 90 நாடுகளுக்கு போய் வந்துவிட்டார். இன்னும் 10 நாடுகளுக்கு சென்று வந்தால் நாமும் 100 நாடு கண்ட பிரதமர் என்று பாராட்டுக்கூட்டம் போடலாம். ஆனால் ஒரு அனுதாப செய்தியாவது அனுப்ப வேண்டாமா? இந்தியாவின் பிற பகுதிகளில், உலக நாடுகளில் பேரிடர் ஏற்பட்ட போதெல்லாம் அனுதாப செய்தி அனுப்புகிறார். தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்ட மக்களுக்கு ஒரு அனுதாப செய்தியை அவர் சொல்லியிருக்க வேண்டாமா? தமிழகத்தின் மீது அவர்களுக்கு எவ்வளவு அலட்சியம் என்பது இதில் இருந்து தெரிகிறது. அதற்கு காரணம் இங்கிருக்கிற அரசாங்கம்.

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடகாவுக்கு ஆதரவாக இருக்கிறது. மத்திய அரசு இதுபோன்ற பிரச்சினைகளில் தமிழகத்துக்கு ஒட்டுமொத்தமாக துரோகம் செய்கிறது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் அமைச்சரவை கூடி முடிவெடுக்க வேண்டும், அப்போதுதான் அதற்கு வலிமை அதிகம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போதே கூறினார். அரசு தரப்பில் அதெல்லாம் தேவையில்லை என்றார்கள். அதனால்தான் மீண்டும் ஸ்டெர்லைட் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த பிரதமராக ராகுல்காந்தி வரவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்தை திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சித்தலைவர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு துரைமுருகன் கூறினார். பேட்டியின் போது எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story