மாவட்ட செய்திகள்

மதுக்கடை ஷட்டரை உடைத்து ரூ.1¾ லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு + "||" + Breach of bartender Shatir and steal Rs.1.5 lakh liquor

மதுக்கடை ஷட்டரை உடைத்து ரூ.1¾ லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு

மதுக்கடை ஷட்டரை உடைத்து ரூ.1¾ லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு
திருமக்கோட்டை அருகே மதுக்கடை ஷட்டரை உடைத்த மர்ம நபர்கள் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தி கடையில் இருந்த ரூ.1¾ லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்றனர்.
திருமக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம், திருமக்கோட்டை-கன்னியாக்குறிச்சி சாலையில் மகாராஜபுரத்தில் அரசுமதுக்கடை உள்ளது. இந்த மதுக்கடை ஊருக்கு வெளிப்புறத்தில் நெல் கொள்முதல் நிலையம் அருகில் உள்ளது. இக்கடையின் விற்பனையாளர்களாக நீடாமங்கலத்தை சேர்ந்த துரை(வயது45), மன்னார்குடியை சேர்ந்த சுரேஷ் (39) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்து ஊழியர்கள் கடையை மூடி விட்டு சென்றனர். நேற்று காலையில் மதுக்கடை கட்டிடத்தின் உரிமையாளர் ஆனந்தன் என்பவர் வந்தார். அப்போது மதுக்கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர் திருமக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.


இதன்பேரில் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், பரவாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷாநந்தினி, திருமக்கோட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மர்மநபர்கள் மதுக்கடையின் ஷட்டரை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்றனர். மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த 3 கண்காணிப்பு கேமிராக்களை உடைத்து, மின்இணைப்பு பெட்டியில் இருந்த பியூஸ்கேரியர், பல்புகள் ஆகியவற்றை உடைத்து அருகில் உள்ள வயல் வெளியில் மர்மநபர்கள் வீசி சென்றுள்ளனர். மேலும் மதுக்கடையின் பின்புறத்தில் உள்ள பாரின் ஷட்டரையும் மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். ஆனால் பாரில் இருந்த பொருட்கள் திருட்டுபோகவில்லை.

திருட்டு நடந்த மதுக்கடைக்கு திருவாரூரில் இருந்து மோப்பநாய் ஸ்டெபி வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் மதுக்கடையில் இருந்து 500 மீட்டர் தூரம் ஓடி சென்று திரும்பி வந்தது. மேலும் திருவாரூரில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் உடைந்து கிடந்த கண்காணிப்பு கேமராக்கள், உடைந்த பியூஸ் கேரியர், பல்புகள் ஆகியவற்றையும் சேகரித்து சென்றனர். இதுகுறித்து திருமக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மதுக்கடையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பும் திருட்டு நடந்தது குறிப்பிடத்தக்கது. மதுக்கடையின் மின்இணைப்பை துண்டித்தும், கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியும் மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.