ரெயில்வே மேம்பால பணிக்காக போக்குவரத்தில் மாற்றம்


ரெயில்வே மேம்பால பணிக்காக போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 20 Dec 2018 10:15 PM GMT (Updated: 20 Dec 2018 7:19 PM GMT)

ராமநாதபுரத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் ரெயில் நிலையம் அருகில் ரெயில்வே கேட் அமைந்துள்ளது. நகரின் முக்கிய பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள இந்த ரெயில்வே கேட் பகுதியில் ரெயில் வரும் நேரங்களில் கேட் மூடப்படுவதால் அதிக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் மக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

இதனை போக்கும் வகையில் இந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ஆண்டாண்டுகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் இந்த ரெயில்வே கேட் பகுதியில் புதிய சாலை மேம்பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ரூ.30 கோடியே 74 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு பணிகளை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்த மேம்பாலமானது, மொத்தம் 675.56 மீட்டர் நீளத்திலும், 11 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட உள்ளது. அதேபோல பாலத்திற்கான அணுகு சாலை இருபுறமும் சேர்த்து மொத்தம் 379 மீட்டர் நீளம் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளை 2 ஆண்டு காலத்திற்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ப சாலை மேம்பால ஆரம்ப கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது சாலைகளை சரிசெய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி ரெயில்வே கேட் பகுதியில் கீழக்கரைக்கு செல்லும் சாலை மூடப்பட்டு அந்த பகுதியில் காவல்துறையின் சார்பில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்ல அறிவிப்பு தடுப்புவேலி அமைக்கப்பட்டுள்ளது.

ரெயில்வே கேட் வழியாக கீழக்கரை, திருப்புல்லாணி மற்றும் சாயல்குடி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் கலெக்டர் அலுவலகத்தை அடுத்துள்ள கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேம்பாலம் அமைக்கும் வகையில் ரெயில்வே கேட்டை அடுத்துள்ள சக்கரக்கோட்டை சேதுநகர் பகுதியில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சாலைகள் தோண்டப்பட்டு வருகின்றன. இருசக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்டவைகள் மட்டும் அந்த வழியாக சென்று வருகின்றன. பஸ், லாரி, கார் போன்ற வாகனங்கள் செல்ல முடியாது என்பதால் கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

Next Story