திருவாவடுதுறை ஆதீன கோவில் கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல் விவசாயி கைது


திருவாவடுதுறை ஆதீன கோவில் கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல் விவசாயி கைது
x
தினத்தந்தி 20 Dec 2018 10:15 PM GMT (Updated: 20 Dec 2018 7:23 PM GMT)

குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீன கோவில் கண்காணிப்பாளருக்கு கொலைமிரட்டல் விடுத்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

குத்தாலம்,

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை தெற்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 70). இவர், திருவாவடுதுறை ஆதீனத்தில் உள்ள கோமுக்தீஸ்வரர் கோவிலில் கண்காணிப்பாளராக உள்ளார். திருவாவடுதுறை கீழத்தெருவை சேர்ந்த விவசாயி சாமிநாதன் (42) திருவாவடுதுறை ஆதீனத்தில் உள்ள கோமுக்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நஞ்சை நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து, கோவிலுக்கு அதற்குரிய குத்தகை நெல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அந்த நிலத்திற்கு பயிர்க்காப்பீடு செய்வதற்காக நிலத்தின் அளவீடு ரசீது பெற கோமுக்தீஸ்வரர் கோவில் அலுவலகத்திற்கு சாமிநாதன் சென்றார். அப்போது அங்கிருந்த கோவில் கண்காணிப்பாளர் சண்முகம், 2 ஏக்கருக்கு உரிய நிலத்தின் அளவீடு ரசீதை கொடுத்துள்ளார். இதனை பெற்ற சாமிநாதன், கோவில் நிலம் 2 ஏக்கர் அளவிலேயே குத்தகைக்கு எடுத்துள்ள நிலையில், தன்னிடம் 2¾ ஏக்கருக்குரிய நெல்லை பெற்றது ஏன் என்று கேட்டு சண்முகத்திடம் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சாமிநாதன், சண்முகத்திற்கு கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

கைது

இதுகுறித்து சண்முகம் குத்தாலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமிநாதனை கைது செய்தனர்.

Next Story