தொழில் அதிபர் துரைராஜ் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தடயவியல் துறை முன்னாள் உதவி இயக்குனர் கோர்ட்டில் சாட்சியம்


தொழில் அதிபர் துரைராஜ் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தடயவியல் துறை முன்னாள் உதவி இயக்குனர் கோர்ட்டில் சாட்சியம்
x
தினத்தந்தி 20 Dec 2018 11:00 PM GMT (Updated: 20 Dec 2018 7:49 PM GMT)

தொழில் அதிபர் துரைராஜ் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் சாட்சிகள் விசாரணை மீண்டும் சூடுபிடித்து உள்ளது. தடய அறிவியல் துறை முன்னாள் உதவி இயக்குனர் திருச்சி கோர்ட்டில் ஆஜர் ஆகி சாட்சியம் அளித்தார்.

திருச்சி,

திருச்சி கிராப்பட்டியை சேர்ந்த தொழில் அதிபர் துரைராஜ், அவரது கார் டிரைவர் சக்திவேல் ஆகியோர் கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ந்தேதி நள்ளிரவு வையம்பட்டி அருகே காருடன் எரித்து கொலை செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் வையம்பட்டி போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

துரைராஜ் நிலம் வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததால் தொழில் போட்டி காரணமாக இந்த இரட்டை கொலை நடந்ததா? அல்லது பெண்கள் தொடர்பான பிரச்சினையில் நடந்ததா ? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் இந்த கொலையில் துப்பு துலங்கவில்லை. இதனால் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளையும் கைது செய்ய முடியவில்லை.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர புலன் விசாரணை நடத்தி துரைராஜையும், சக்திவேலையும் எரித்து கொலை செய்ததாக ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சாமியார் கண்ணன், அவரது கள்ளக்காதலி திருவானைக்காவலை சேர்ந்த யமுனா ஆகியோரை கடந்த 2013-ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் திருச்சி இரண்டாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் சாமியார் கண்ணன் தனது கள்ளக்காதலி யமுனாவுடன், துரைராஜ் ரகசிய தொடர்பு வைத்து இருந்ததை கண்டு பிடித்து, அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் துரைராஜை காருடன் கடத்திச் சென்று கொலை செய்ததாக கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. கொலை செய்யப்பட்ட துரைராஜின் மனைவி லீமாகுமாரி, தாயார் சின்ன பொன்னு, தம்பி நெப்போலியன், மற்றும் கிராம நிர்வாக அதிகாரி உள்பட 32 முக்கிய சாட்சிகள் கோர்ட்டில் ஆஜர் ஆகி சாட்சியம் அளித்தனர். அதன் பின்னர் இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணையில் மந்தம் ஏற்பட்டு கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு முருகவேல் முடுக்கி விட்டு உள்ளார். இதனை தொடர்ந்து நேற்று இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளில் ஒருவரான தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் வனஜா கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

தடய அறிவியல் துறையில் உதவி இயக்குனராக நான் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டேன். நான் பணியில் இருந்த போது மணப்பாறை கோர்ட்டு அனுமதி பெற்று துரைராஜ் கொலை நடந்த இடத்தில் இருந்து எலும்பு துண்டுகள், உடல் தசைகள் ஆகியவை சேகரிக்கப்பட்டன. பின்னர் துரைராஜின் தாய் சின்ன பொன்னு, மனைவி லீமாகுமாரி, மகன் ஜெயக்குமார் ஆகியோரிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தடய அறிவியல் துறையில் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. இதில் எரித்து கொலை செய்யப்பட்டது துரைராஜ் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இறந்த துரைராஜின் உடல் பாகங்கள் அவரது ரத்த உறவுகளிடம் இருந்து எடுக்கப்பட்டவையுடன் ஒத்துப்போனது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 19-ந் தேதிக்கு நீதிபதி குணசேகரன் தள்ளி வைத்து உத்தரவிட்டார். சாட்சிகள் விசாரணையின்போது சாமியார் கண்ணனும், யமுனாவும் சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு இருந்தனர். இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஏ. ராஜேந்திரன் ஆஜராகி வாதாடினார். 

Next Story