மாவட்டம் முழுவதும் 1-ந்தேதி முதல் பாலித்தீன் பைகளுக்கு தடை - கலெக்டர் உத்தரவு


மாவட்டம் முழுவதும் 1-ந்தேதி முதல் பாலித்தீன் பைகளுக்கு தடை - கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 20 Dec 2018 10:00 PM GMT (Updated: 20 Dec 2018 9:54 PM GMT)

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வருகிற 1-ந்தேதி முதல் அனைத்து வகை பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடைவிதித்து கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தை பிளாஸ்டிக் உபயோகமற்ற மாவட்டமாக மாற்றுவது குறித்து, அனைத்துத்துறை அரசு முதன்மை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார்.

கூட்டத்தின்போது, கலெக்டர் கூறியதாவது:-

தமிழகத்தில் வருகிற 1-ந்தேதி முதல் பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் பால், தயிர், எண்ணெய், மருந்துகளுக்கான உறைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி முதல், தடிமன் அளவு இன்றி அனைத்து வகை பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. வியாபாரிகள், அரசு விதிகளின்படி தயாரிக்கப்பட்டுள்ள பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்துத்துறை அதிகாரிகளும் கடைகள் உள்ளிட்ட இடங்களில் திடீர் சோதனை நடத்த வேண்டும். அப்போது, பாலித்தீன் பைகள் பயன்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்து, அந்த கடைகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்படும் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து தினமும் கலெக்டருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்கள், சந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதுகுறித்து விழிப்புணர்வு பலகைகள் வைக்க வேண்டும். விளம்பர பேனர்களை துணிகளில் வைத்தால் நன்றாக இருக்கும். மேலும் கலைக்குழுவினர் மூலமும் நாடகங்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

குறிப்பாக பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகளில் பிளாஸ்டிக் உபயோகத்தினை முற்றிலும் தவிர்த்து, அங்குள்ள தகவல் பலகையில் நோட்டீஸ் ஒட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, சுற்றுச்சூழல் பொறியாளர் மதிவாணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story