கொடுமுடி அருகே மூதாட்டியை கொன்ற விவசாயி கைது கடன் தராததால் நடந்த கொடூரம்


கொடுமுடி அருகே மூதாட்டியை கொன்ற விவசாயி கைது கடன் தராததால் நடந்த கொடூரம்
x
தினத்தந்தி 21 Dec 2018 10:30 PM GMT (Updated: 21 Dec 2018 4:46 PM GMT)

கொடுமுடி அருகே மூதாட்டியை கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர். கடன் தர மறுத்ததால் கொலை செய்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

கொடுமுடி, 

கொடுமுடி அருகே உள்ள ராசாம்பாளையம் சம்மங்குட்டைபுதூரை சேர்ந்தவர் முத்துசாமி. விவசாயி. இவருடைய மனைவி அருக்காணி (வயது 70). இவர்களுடைய மகள்கள் திலகவதி (49), செல்வி (40). திலகவதி கரூரில் கணவருடன் வசித்து வருகிறார். செல்வி சுமைதாங்கிப்புதூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று முத்துசாமி மகள் செல்வியின் வீட்டுக்கு சென்றிருந்தார். அருக்காணி மட்டும் சம்மங்குட்டைப்புதூரில் உள்ள வீட்டில் தனியாக இருந்தார்.

இந்தநிலையில் கடந்த 11-ந் தேதி அருக்காணி கொலைசெய்யப்பட்டு வீட்டில் உள்ள கட்டிலில் பிணமாக கிடந்தார். இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அருக்காணி கழுத்தில் அணிந்திருந்த தாலிச்சங்கிலியை காணவில்லை. யாரோ மர்மநபர் வீடு புகுந்து அருக்காணி தாலிச்சங்கிலியை பறித்துவிட்டு அவரை கொலை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் கொலையாளியை பிடிக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் துரைசாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொலையாளியை தீவிரமாக தேடி வந்தார்கள்.

இந்த நிலையில் போலீசார் நேற்று முன்தினம் மதியம் சாலைப்புதூர்-நொய்யல்ரோட்டில் வருந்தியாபாளையம் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக 2 பேர் வந்த ஒரு மோட்டார்சைக்கிளை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அதில் இருந்த ஒருவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் கொடுமுடி அருகே உள்ள குப்பம்பாளையத்தை சேர்ந்த விவசாயி மாரிமுத்து (வயது 54) என்பது தெரிய வந்தது. மேலும் அருக்காணியை தான் கொலை செய்ததை போலீசாரிடம் அவர் ஒப்புக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

அருக்காணியிடம் நான் கடன் வாங்கியிருந்தேன். அந்த பணத்தை நான் திருப்பி கொடுக்கவில்லை. இந்த நிலையில் எனக்கு மேலும் பணம் தேவைப்பட்டது. எனவே கடந்த 10-ந் தேதி அன்று அருக்காணியின் வீட்டுக்கு சென்று அவரிடம் கடனுக்கு பணம் தருமாறு கேட்டேன். அதற்கு அவர், ‘ஏற்கனவே வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்தால் தான் கடன் தருவேன்’ என்று கூறி கடன் தர மறுத்தார். இதனால் எங்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் அங்கு கிடந்த கட்டையை எடுத்து அருக்காணி தலையில் அடித்தேன். மேலும் அவரது வாய், மூக்கு போன்ற இடங்களில் தாக்கினேன். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். சிறிது நேரத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

உடனே நான் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிசங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டேன். அந்த தாலிச்சங்கிலியை வங்கியில் அடமானம் வைத்து ரூ.65 ஆயிரம் பெற்றேன். பின்னர் அந்த பணத்தை வைத்து ஜாலியாக செலவு செய்து வந்தேன். சாலைப்புதூர் அருகே மோட்டார்சைக்கிளில் வந்தபோது போலீசாரிடம் நான் சிக்கிக்கொண்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

மேலும் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட தாலிச்சங்கிலி மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாரிமுத்து கொடுமுடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி குமாரவர்மன் முன் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அவரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story